Breaking News

அமெரிக்கா நடத்திய கருத்தரங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பு

அரசியலமைப்பை வரைவது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆற்றலை வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பில் நேற்று அமெரிக்கா நடத்திய கருத்தரங்கில், மிகக் குறைந்தளவு நாடாளுமன்ற உறுப்பினர்களே பங்கேற்றனர்.

புதிய அரசியலமைப்பை இலங்கை வரையவுள்ள நிலையில், இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவூட்டும் வகையில், யுஎஸ்எயிட் அமைப்பினால் நேற்று கொழும்பில் ஒரு நாள் கருத்தரங்கு நடத்தப்பட்டது.

இந்தக் கருத்தரங்கில் பங்கேற்குமாறு இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது நேற்று வோட்டர் எட்ஜ் விடுதியில் இந்தக் கருத்தரங்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜெயசூரிய, அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஆனால், நேற்றைய கருத்தரங்கில், மதிய வேளையில் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றிருந்தனர். கூட்டு எதிர்க்கட்சி மற்றும் ஜேவிபி உறுப்பினர்கள் எவரும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்கவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராசா மட்டும் பங்கேற்றிருந்தார்.இலங்கையின் அரசியலமைப்பை வரைவது தொடர்பாக அமெரிக்கா தலையீடு செய்ய முடியாது என்று, கூட்டு எதிர்க்கட்சியினர் ஏற்கனவே தெரிவித்திருந்ததுடன், இந்தக் கருத்தரங்கைப் புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்திருந்தனர்.

எனினும், இந்தக் கருத்தரங்களில் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களும் குறைந்தளவிலேயே பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.