காணாமல் போனோரின் உறவுகள் அம்பாறையில் கவனயீர்ப்பு பேரணி - THAMILKINGDOM காணாமல் போனோரின் உறவுகள் அம்பாறையில் கவனயீர்ப்பு பேரணி - THAMILKINGDOM

  • Latest News

    காணாமல் போனோரின் உறவுகள் அம்பாறையில் கவனயீர்ப்பு பேரணி

    அம்பாறை – அக்கரைப்பற்றில் காணாமல் போனோரின் உறவுகள், தமது உறவுகளுக்கு நீதிகேட்டு கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

    ஜெனீவா வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்வோம் எனும் தொனிப் பொருளில் காணாமல் போனோர்களின் உறவுகள் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அம்பாறை மாவட்ட காணாமற்போனோரின் குடும்ப ஒன்றியத்தின் தலைவி,செல்வராணி தலைமையில் இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

    அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த காணாமல் போனோரின் உறவுகள் இன்று காலை 9.30 மணிக்கு அக்கரைப்பற்று சாகாம வீதி மற்றும் அம்பாறை வீதி மற்றும் பொத்துவில் வீதி ஆகிய இடங்களில் இருந்து ஆர்ப்பாட்ட பேரணியை ஆரம்பித்துள்ளனர்.

    அக்கரைப்பற்று நகர் மணிக்கூட்டுக் கோபுரத்தில் ஒன்றிணைந்த ஆர்ப்பாட்ட கவனயீர்ப்பு பேரணியில் நூற்றுக்கணக்கான உறவுகள் கலந்துகொண்டனர். 

    எமது உறவுகள் எங்கே என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கறுப்பு பட்டியை தலையில் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    எமது பிள்ளைகள், கணவன், மனைவி, இருக்கின்றனரா? இருப்பார்களென்றால் எங்கே? கொல்லப்பட்டார்களேயானால் ஏன் கொன்றார்கள்? யார் கொலை செய்தது? எதற்காக? எங்கே புதைத்தீர்கள்?

    இதன்போது காணாமல்போகச் செய்தலை காணாமல் போகச் செய்வோம், ஜெனீவா வாக்குறுதிகளை நிறைவேற்று, எமது கணவன்மார்கள், எமது உறவினர்கள், அவர்கள் குற்றம் புரிந்தாலும் புரியாவிடினும் அவர்களை காணாமல்போகச் செய்வதற்கு எவருக்கும் உரிமையில்லை,

    குற்றம் புரிந்தவர்கள் என்றால் சட்டத்தின் பிரகாரம் தண்டனை கொடுக்க முடியும். ஆனால் காணாமற்போகச் செய்ய முடியாது, எமது அன்புக்குரியவர்களுக்கு நடந்ததை அறிய ஒரு தாயாக, மனைவியாக, பிள்ளையாக, உறவினராக முற்று முழுதான உரிமை உண்டு,

    மைத்திரி அரசாங்கம் ஜெனீவாவில் இதுதொடர்பாக சில வாக்குறுதிகளை கொடுத்தது அதில் நடந்த உண்மைகளை வெளிப்படுத்துங்கள், நீதியை நிறைவேற்றுங்கள், நியாயமான இழப்பீட்டை பெற்றுக் கொடுங்கள்,

    மீண்டும் காணாமற்போகச் செய்யும் சம்பவங்களை தடுத்து விடுங்கள் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோகங்கள் ஏந்தியவாறு கல்முனை பிரதான வீதி ஊடாக அக்கரைப்பற்று அதாவுல்லா நகர மண்டபத்தை சென்றடைந்து ஆர்ப்பாட்டத்தை முடிவுக்கு கொண்டனர். 


    இன்று பிற்பகல் இடம்பெறவுள்ள கூட்டத்தில் அதிதிகளாக கலந்துகொண்டுள்ள அமைச்சர் மனோகணேசன், பிரதி அமைச்சர் அனோமா கமகே, கிழக்கு மாகாண முதலமைச்சர் அஹமட் நசீர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் ஆகியோரிடம் மகஜர்களை கையளிக்கவுள்ளனர்.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: காணாமல் போனோரின் உறவுகள் அம்பாறையில் கவனயீர்ப்பு பேரணி Rating: 5 Reviewed By: Tamilkingdom
    Scroll to Top