மஹிந்தவின் ஊழல் ஆட்சியை மீண்டும் தலைதூக்க விடமாட்டோம் - பொன்சேகா
ஊழல் மிக்க சர்வாதிகார ஆட்சியை முன்னெடுத்து நாட்டை சீரழித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மீண்டும் மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடிக்க முயல்வதாகவும் அதற்கு ஒருபோதும் இடமளிக்க கூடாதெனவும் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
‘புதிய இலங்கைக்கு வழிவிடுங்கள்’ எனும் தொனிப்பொருளில், கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தின் ஐக்கிய தேசிய முன்னணியால் நேற்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பொன்சேகா மேற்குறித்தவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்-
‘நாட்டில் நிலவிய சர்வாதிகார ஆட்சியை ஒழித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் நல்லாட்சியை ஏற்படுத்தியுள்ளனர். இதனை இன்னும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்காகவும், நல்லாட்சியை சீர்குலைக்கும் சக்திகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலுமே நாம் ஒன்றுசேர்ந்துள்ளோம்.
நாட்டை சீரழித்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி, மீண்டுமொருமுறை ஏற்பட இடமளிக்கப்படக்கூடாது. அரசியல் அநாதைகளாக மக்களால் நிராகரிக்கப்பட்ட மஹிந்தவின் ஆதரவு தரப்பினர், மீண்டும் அரசியலில் பிரவேசிப்பதற்காக அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுகின்றனர்.
தற்போதைய நல்லாட்சியில் கொள்ளைகள், அரசியல் பழிவாங்கல்கள், சர்வாதிகார போக்கு என்பன இல்லாதொழிக்கப்பட்டு ஜனநாயகம் வலுப்பெற்றுள்ளது. இதனை மேலும் வலுப்படுத்த வேண்டும். அத்துடன், நாட்டை முற்றாக ஊழலற்ற நாடாக மாற்றி நீண்டகால, சக்திமிக்க, சிறந்த பொருளாதார கொள்கையை ஏற்படுத்த வேண்டும். இதற்கு அனைவரும் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கவேண்டும்’ என்றார்.