Breaking News

ராஜீவ் காந்தி கொலை: தண்டனைக் கைதிகளின் விடுதலையில் புதிய சிக்கல்

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கும் ஏழு பேரை விடுவிக்கும் தமிழ்நாடு மாநில அரசின் நடவடிக்கையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவிக்கும்முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயகுமார், ராபர்ட் பயஸ் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான அனுமதி கேட்டு, இந்திய மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு அண்மையில் கடிதம் எழுதியது. இந்தக் கடிதம் இந்தியமத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது.

இந்த விவகாரத்தில் மாநில அரசின் நடவடிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்தால், அது ராஜீவ் கொலைக் குற்றவாளிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வரும் ஒரு தரப்பினருக்கு சாதகமாகும் என்ற கருத்து நிலவுவது குறித்து இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் சைதியிடம் புதுடெல்லியில் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “இந்த விவகாரத்தில் இதுவரை இந்திய மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை என அறிகிறோம். ஒருவேளை மத்திய அரசு எடுக்கும் முடிவு தொடர்பாக ஆணையத்திடம் யாரேனும் புகார் அளித்தால் அதனை தேர்தல் நடத்தை விதிகளின்படி ஆணையம் அணுகும்’ என்று பதிலளித்திருந்தார்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு எந்த முடிவை எடுத்தாலும் அதற்கு தலைமைத் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலைபெற வேண்டியது அவசியம் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.