தமிழர் காணிகளில் சிங்களவர்களுக்கு வீட்டுத்திட்டம்
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் காணிகளில் சிங்கள மக்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கவென நில அளவை செய்வதற்காக வந்த அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் ஆகியோரது எதிர்ப்பால் திரும்பி சென்றுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் உள்ள தமது காணிகளிலிருந்து தமிழ் மக்கள் யுத்தம் காரணமாக வெளியேறினர். அதனையடுத்து அடாத்தாக அங்கு குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கவென நில அளவை செய்வதற்காக நில அளவை அதிகாரிகள் நேற்று அப்பகுதிக்கு வந்துள்ளனர்.
ஆனால் குறித்த அதிகாரிகள் காணிக்கு உரித்துடைய மக்களினதும், வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரனதும் எதிர்ப்பையடுத்து திரும்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இது எமது மூதாதையர்கள் எமக்கு தந்த சொத்து. இதனை அடாத்தாக குடியேறியுள்ளவர்களுக்கு நாம் ஒருபோதும் விட்டுக் கொடுக்கமாட்டோம் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை எமது நிலத்தை ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கும் இவர்கள் தம்மை கடற்றொழிலுக்கு செல்லவிடாது தடுப்பதுடன், அச்சுறுத்தி வருகின்ற நிலையில், எமது நிலத்தை உடனடியாக எமக்கு பெற்றுத்தரவேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர். அதேவேளை இந்த நிலஅளவை செயற்பாடானது அத்துமீறி குடியேறிய சிங்கள மக்களுக்கு வழங்குவதற்காக தமிழர்களது காணிகளை அவர்களிடமிருந்து பறித்தெடுக்கும் ஒரு செயலாகும் என தெரிவித்த வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிவகரன் இவ்விடயத்தில் தான் மக்களுடன் தொடர்ந்தும் இணைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.