Breaking News

சூளைமேட்டு வழக்கு தொடர்பில் இன்று காணொளியூடாக டக்ளஸ் சாட்சியம்

தமிழ்நாடு – சூளைமேட்டில் கடந்த 1986ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக ஈ.பி.டி.பியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ்தேவானந்தா இன்று சனிக்கிழமை காணொளி (வீடியோ கொன்பரன்ஸிங்) ஊடாக சாட்சியமளித்துள்ளார்.

வீடியோ கொன்பரன்ஸிங் ஊடாக அவர் சாட்சியமளிப்பதற்கான ஏற்பாடுகளை கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்துள்ளது. சூளைமேட்டில் கடந்த 1986ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்று பட்டாசு கொளுத்தியவர்கள் மீது ஈ.பி.ஆர்.எல்.எவ். குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகின்றது.  இந்த சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்திருந்தனர்.

இதனையடுத்து இது தொடர்பான வழக்கு சென்னை விசேட அமர்வு நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது. வழக்கு விசாரணைகளின்போது நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு பல தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் முன்னிலையாகியிருக்கவில்லை.

இந்த நிலையில் ‘வீடியோ கொன்பரன்ஸிங்’ மூலம் கொழும்பில் முன்னிலையாவார் என டக்ளஸ் தேவானந்தா தரப்பில் சென்னை நீதிமன்றில் மனு தாக்கல் ஊடாக தெரிவிக்கப்பட்டது. இதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதோடு, இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் முன்னெடுத்தது.இந்த நிலையிலேயே டக்ளஸ் தேவானந்தா இன்று சனிக்கிழமை சாட்சியமளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.