எச்.ஐ.வி வதந்தி: மகனின் கல்வி உரிமையைப் பாதுகாக்க போராடும் தாய்
எச்.ஐ.வி தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரவிய வதந்தியால், தனது மகன் பாடசாலைக்கு நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் கல்வி அமைச்சர், குளியாப்பிட்டிய வலயக் கல்வி பணிப்பாளர், குளியாப்பிட்டியவிலுள்ள இரண்டு பள்ளிக்கூடங்களின் அதிபர்கள் உட்பட சிலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தனது மகனுக்கு எச்.ஐ.வி. தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பள்ளியில் பயில அனைத்து தகமைகளும் இருப்பதாகவும் மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனினும் குளியாப்பிட்டியவிலுள்ள இரண்டு பாடசாலைகளின் அதிபர்கள், தனது மகனை பாடசாலையில் சேர்ப்பதற்கு மறுத்துள்ளதாக அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது மகனின் கல்வி உரிமையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படியும் பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் மனுமூலம் கோரிக்கை விடுத்துள்ளார். குருநாகல் மாவட்டத்திலுள்ள குளியாப்பிட்டிய என்ற இடத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் ஒருவனுக்கு, எச்.ஐ.வி. தொற்று இருப்பதாக பரவிய வதந்தியினால் அந்த சிறுவனை தமது பாடசாலையில் அனுமதிப்பதை அப்பகுதி பாடசாலைகள் தவிர்த்து வந்தன. தனது மகனின் கல்வி உரிமை மறுக்கபட்டதற்கு எதிராக போராடிய அவரது தயார், சிறுவனுக்கு எச்.ஐ.வி. தொற்று இல்லை என்பதை மருத்து ரீதியாக உறுதிப்படுத்தியிருந்தார்.
இதையடுத்து கல்வி அமைச்சின் அதிகாரிகளின் தலையீட்டில், குளியாப்பிட்டியவிலுள்ள ஒரு பாடசாலையில் சிறுவன் கல்வி பயில அனுமதிக்கபட்டதுடன், இதற்கு மற்றைய மாணவர்களின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் சிறுவனின் ஆவண அடையாளங்களை மாற்றி, வேறு பாடசாலையில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அந்த மாகாணத்தின் கல்வியமைச்சர் தெரிவித்திருந்தார். இவ்வாறானதொரு நிலையிலேயே சிறுவனின் தாயார் தற்போது அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்குதல் செய்துள்ளார்.