தகவல் அறியும் சட்டமூலம் வட மாகாண சபையில் ஏகமனதாக ஏற்பு
தகவல் அறியும் சட்டமூலம் வட மாகாண சபையில் இன்று (வியாழக்கிழமை) ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. திருத்தங்களுடன் கூடிய வடமாகாண சபையின்; தீர்மானம் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. இதன் போது, தகவல் அறியும் உரிமை சட்ட மூலத்தை வடமாகாண சபையின் ஒப்புதலுக்காக சபையில் முதலமைச்சர் சமர்பித்தார்.
அப்போது, “சட்டமூலம் ஒப்புதலுக்காக கடந்த டிசம்பர் மாதமே அனுப்பப்பட்டு இருந்த நிலையில் எதற்காக மூன்று மாத கால தாமதத்திற்கு பின்னர் சபையில் சமர்பிக்கப்பட்டது” என எதிர்க்கட்சி உறுப்பினர் தவநாதன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த முதலமைச்சர், “கால தாமதத்திற்கு பொறுப்பு நானே, கடந்த டிசம்பர் மாதம் வடமாகாண ஆளுநர் எனக்கு தனிப்படவே என் கருத்தை அறிவதற்காகவென அனுப்பி வைத்து இருந்தார்.
அதன் பின்னர் அவைத்தலைவர், முதலமைச்சரின் கருத்தினை மாத்திரம் ஏற்காது மாகாண சபையில் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டு உறுப்பினர்களின் கருத்துக்களும் அறியப்பட வேண்டும் என கோரியதன் அடிப்படையில் தான் சபையில் சமர்ப்பித்து உள்ளேன். எனது வேலைபளு காரணமாகவே தாமதம் ஏற்பட்டது”- என்றார்.
அத்துடன், தான் சட்டமூலத்தில் சில இடங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என சுட்டிகாட்டி தனது கருத்தினை இணைத்துள்ளேன். அந்த சட்டமூலத்தை ஏற்றுக்கொள்வோம் என தெரிவித்தார்.
அதற்கு, குறித்த சட்டமூலத்தை பிரிவு பிரிவாக விவாதித்து, பரிந்துரைகள் வழங்க வேண்டும், கடந்த காலங்களில் நாங்கள் வஞ்சிக்கப்பட்டது போன்று இனிவருங்காலங்களிலும் வஞ்சிக்கப்படக்கூடாது என உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கமும், தகவல் அறியும் சட்டமூலத்தில் தேசிய பாதுகாப்பு எனப்படும் விடயம் வரையறை செய்யப்பட வேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரனும் கருத்துக்களை முன்வைத்தனர்.
அத்துடன் சில உறுப்பினர்கள் சட்டமூலம் தொடர்பில் விவாதித்தித்து மாகாண சபை உறுப்பினர்களின் கருத்துக்களையும் உள்ளடக்குவோம் என கோரினார்கள். அதற்காக ஒரு நாள் அமர்வு நடாத்தப்பட வேண்டும் எனவும் கோரினார்கள்.
அதனை தொடர்ந்து தேநீர் இடைவேளை விடப்பட்டது. தேநீர் இடைவேளை முடிவடைந்து சபை கூடியதும், ‘வடமாகாண முதலமைச்சரால் செய்யப்பட்ட திருத்தங்கள் மற்றும் உறுப்பினர்கள் சிலரின் தீர்மானங்களுடன் இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அனுப்பவுள்ளோம். இதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்கின்றதா?’ என அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் உறுப்பினர்களைப் பார்த்துக் கேட்டார்.
இதையடுத்து, எவரும் ஆட்சேபனை தெரிவிக்காத நிலையில், சட்டமூலத்தை ஏகமனதாக ஏற்றுக்கொள்வதாக அவைத்தலைவர் அறிவித்தார்.








