தமிழர்களின் பிரச்சினை தீர்க்கவேண்டிய அவசியமில்லை!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வட மாகாண சபையும் ஒன்றிணைந்து வடக்கிலுள்ள சிங்கள மக்களை விரட்டியடிக்கும் தந்திரத்தை கையாண்டு வருவதாகவும், ஆகவே சிங்கள பௌத்தர்களின் உரிமைகள் பூரணமடையும் வரை தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் அக்கறை காட்டக் கூடாதெனவும் சிங்கள கடும்போக்குவாத அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
கொழும்பில் நேற்று (புதன்கிழமை) பொது பல சேனா, சிங்கள ராவய, ராவணா பலய ஆகிய பௌத்த அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இவ்விடயத்தை தெரிவித்தன. குறித்த சந்திப்பில் கருத்துத் தெரிவித்த பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்,
‘நாட்டின் பாதுகாப்பிற்கு இன்று பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சிங்கள பௌத்த மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். வடக்கில் இடம்பெற்றுவரும் அரசியல் நடவடிக்கைள் மற்றும் சர்வதேச ரீதியில் இயங்கும் பிரவினைவாத அமைப்புகளின் செயற்பாடுகள், மிகவும் பாரதூரமாக அமைந்துள்ளன. ஆகவே, பிரிவினைக்கு அப்பால் சிங்கள தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சிங்கள மக்களை பாதுகாக்க வேண்டும்.
ஆயுத போராட்டத்தை தோற்கடித்து யுத்தத்தை வெற்றிகொண்ட நிலையில், ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாடு மீண்டும் பழைய நிலையை நோக்கி செல்கின்றது. வடக்கில் சிங்கள மக்களை மீண்டும் குடியமர்த்த வேண்டுமென நாம் தெரிவித்து வரும் நிலையில், அதனைத் தடுக்கும் வகையில் தமிழ் அரசியல் தரப்புகள் செயற்படுகின்றன. வட மாகாண அரச சேவையில் சிங்களவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். சிங்களவர்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு தமிழர்கள் குடியமர்த்தப்படுகின்றனர்.
வவுனியா, வெலிவேரிய ஆகிய பகுதிகளில் சிங்கள பாடசாலைகளை மூடி, சிங்கள மாணவர்களின் கல்வித் தகைமையை மழுங்கடிக்கும் செயற்பாடுகள் நடைபெறுகின்றன. கொக்கிளாய் எனும் சிங்கள பிரதேசத்தில் வீடுகளை அமைத்து அங்கு முழுக்க முழுக்க தமிழ் மக்களை குடியமர்த்தும் செயற்பாடுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டு வருகிறது. சிங்கள மக்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு வடக்கு கிழக்கு இணைந்த தனி நாட்டினை உருவாக்க தமிழர் தரப்பு முயற்சித்து வருகின்றது. இதனைத் தடுக்க எமது சிங்கள தலைவர்களுக்கு தற்போது தைரியம் இல்லாமல் போயுள்ளது. வடக்கில் சிங்கள மக்களின் வீடமைப்புக்கு ஒதுக்கிய நிதியை கூட்டமைப்பினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதன் பின்னணியில் தனிநாட்டு கோரிக்கையே உள்ளது.
வடக்கில் நடக்கும் இந்த ஆக்கிரமிப்பு பற்றி ஜனாதிபதிக்கோ அல்லது வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கோ தெரியுமா? இங்கு பூனையாக இருந்துகொண்டு வடக்கிற்கு சென்றதும் புலிக்குட்டிகளாக மாறும் அமைச்சர் சுவாமிநாதன் இந்த செயற்பாடுகள் தொடர்பில் என்ன கூறப் போகிறார்?
யுத்தத்தில் தமிழர்கள் மட்டுமல்ல, சிங்களவர்களும் கொல்லப்பட்டனர். ஆனால் வடக்கில் இன்று சிங்களவர்களுக்கு உரிமையுடன் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு எமது மக்களின் எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்காத நிலையில், சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கவேண்டிய அவசியமில்லை’ என்றார்.








