வலி. வடக்கின் மேலும் சில பகுதிகள் சித்திரை வருடப்பிறப்பின் முன் விடுவிப்பு?
யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து மேலும் சில பகுதிகள் சித்திரை புதுவருடத்திற்கு முன்னர் யாழ். வருகை தரும் ஜனாதிபதியினால் விடுவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து மக்களுடைய நிலங்கள் பகுதி பகுதியாக விடுவிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த 2015 டிசம்பர் மாதம் யாழ். வந்த ஜனாதிபதி 6 மாதங்களுக்குள் மக்களுடைய நிலங்கள் மக்களிடமே வழங்கப்படும் என உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில், 2015 இறுதி பகுதியில் 701.5 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டிருந்தது. அதற்கு மேலதிகமாக எந்தவொரு நிலமும் விடுவிக்கப்படாத நிலையில் காங்கேசன்துறை நடேஷ்வரா கல்லூரி மற்றும், அதனை அண்டிய பகுதிகள் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் காங்கேசன்துறை, கட்டுவன், குரும்பசிட்டி ஆகிய 3 பகுதிகளில் 280 ஏக்கர் நிலம் சித்திரை புதுவருடத்திற்கு முன்னதாக யாழ். வருகை தரும் ஜனாதிபதியினால் விடுவிக்கப்படும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. இந்தப் பகுதிகளில் காணிகளை விடுவிப்பதற்கான முதற்கட்டப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன.








