Breaking News

காணா­மற்­போன உற­வு­களின் கண்ணீர் சாட்­சி­யங்கள்


காணா­மற்போனோர் தொடர்­பான விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் மக்ஸ்வெல் பர­ண­கம தலை­மை­யி­லான ஜனா­தி­பதி ஆணைக்­குழு கடந்த சனிக்­கி­ழமை யாழ்ப்­பா­ணத்தில் மீண்டும் தனது விசா­ரணை அமர்­வு­களை நடத்தி இருந்­தது.


அதற்­க­மைய கர­வெட்டிப் பிர­தேச செய­லகம், வேலணைப் பிர­தேச செய­லகம், சாவ­கச்­சேரி பிர­தேச செய­லகம் ஆகிய இடங்­களில் நான்கு நாட்கள் இடம்­பெற்ற விசா­ர­ணையில் காணா­மற்போ­னோரின் உற­வுகள் தமது உற­வு­களை மீட்க வலி­யு­றுத்தி கண்­ணீ­ரோடு சாட்­சி­யங்­களை வழங்­கி­யி­ருந்­தனர் அவை வரு­மாறு :

வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்­று­வந்த கண­வரை இரா­ணு­வமே பிடித்துச் சென்­றது

இறுதி யுத்­தத்­தின்­போது படு­கா­ய­ம­டைந்த நிலையில் வவு­னியா வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வந்த விடு­தலைப் புலி­களின் புல­னாய்­வுத்­துறை உள்­ளகப் பொறுப்­பாளர் காந்தி எனும் பெய­ரு­டைய தனது கண­வரை இரா­ணு­வமே பிடித்துச் சென்­றது என அவ­ரு­டைய மனைவி ஆணைக்­கு­ழு­விடம் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார்.

கோப்பாய் பிர­தேச செயலர் பிரிவில் நடை­பெற்ற ஆணைக்­குழு விசா­ர­ணையில் காந்­தியின் மனை­வி­யான மகேஸ்­வரன் பிர­பா­கரி மேலும் சாட்­சி­ய­ம­ளித்­த­தா­வது,

தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்­கத்தின் புல­னாய்­வுத்­து­றையின் உள்­ளகப் பொறுப்­பா­ள­ராக இருந்த எனது கணவர் வன்­னியில் இறுதி யுத்தம் இடம்­பெற்­ற­போது படு­கா­ய­ம­டைந்து வவு­னியா வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்தார். இதன்­போது மற்­று­மொரு போராளி எனது கண­வரை இரா­ணு­வத்­திடம் காட்­டிக்­கொ­டுத்­தி­ருந்தார். இந்­நி­லையில் சிகிச்சை பெற்று வந்த எனது கண­வரை இரா­ணு­வத்­தினர் பிடித்துச் சென்­றனர்.

இதன்­பின்னர் மீண்டும் ஆறு மாதங்கள் கழித்து எனது கண­வரை சிகிச்­சைக்­காக வவு­னியா வைத்­தி­ய­சா­லைக்கு இரா­ணு­வத்­தினர் அழைத்து வந்­ததை நான் கண்டேன்.

எனவே எனது கணவர் உயி­ருடன் தான் உள்ளார் என்­பது எனக்குத் தெரியும். தயவு செய்து எனது கண­வனை மீட்­டுத்­தா­ருங்கள் என அவர் கண்­ணீ­ரோடு சாட்­சியப் பதிவை வழங்­கி­யி­ருந்தார்.

என்­னு­டைய மக­னையும் மக­ளையும் இரா­ணு­வமே இழுத்துச் சென்­றது.

இறுதி யுத்­தத்தில் இரா­ணு­வத்­தி­னரின் கட்­டுப்­பாட்­டுக்குள் வந்­த­போது என்­னோடு இருந்த எனது மக­னையும் மக­ளையும் பெண் இரா­ணுவ சிப்­பாய்­களே இழுத்துச் சென்று பேருந்தில் ஏற்றி சென்­றனர். அதன் பின்னர் எனது பிள்­ளை­களை எங்கு கொண்டு போனா ர்கள், என்ன செய்­தார்கள் என்று எனக்குத் தெரி­ய­வில்லை. எனவே தயவு செய்து எனது பிள்­ளை­களை மீட்­டுத்­தா­ருங்கள் என கோப் பாய் பிர­தேச செயலர் பிரிவில் நடை­பெற்ற ஆணைக்­குழு முன் தாயொ­ருவர் கத­றி­ய­ழுதார்.

அவர் அங்கு மேலும் சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,

எனது மகன் பெயர் புவ­னேந்­திரன் மதன் ராஜ். மகள் பெயர் நிசாந்­தினி புவ­னேந்­திரன். நாங்கள் வன்­னியில் இடம்­பெற்ற இறுதி யுத்­தத்தில் இடம்­பெ­யர்ந்து செல்­லும்­போது பிரிந்து விட்டோம். எனினும் இரா­ணுவ கட்­டுப்­ பாட்­டுக்குள் சென்ற பின்னர் மூவரும் ஓமந் தைப் பகு­தியில் ஒன்று சேர்ந்தோம்.

இதன்­போது 2009 மே மாதம் 19 ஆம் திக­தி­யன்று என்­னோடு எனது மகளும் மகனும் பேசிக் கொண்­டி­ருக்­கும்­போது பெண் இரா­ணுவ சிப்­பாய்கள் வந்து பிள்­ளைகள் இரு­வ­ரையும் இழுத்துச் சென்று மகளை பெண்கள் பிரி­விலும் மகனை ஆண்கள் பிரி­வி­லு­மாக பேருந்தில் ஏற்றிச் சென்­றனர். அப்­பே­ருந்தில் எனது மகன், மகள் போன்று வேறு பல சிறு­வர்­களும் இருந்­தார்கள்.

அப்­போது நான் அவர்­க­ளிடம் எனது பிள்­ளை­களை விட்­டு­வி­டும்­படி கெஞ்சிக் கேட்­டி­ருந்தேன். அதற்கு அவர்கள் நாங்கள் உங்கள் பிள்­ளை­களை மீண்டும் கொண்டு வந்து விடு­வ­தாக கூறி­விட்டு அழைத்துச் சென்­றனர். அதன் பின்னர் எது­வித தக­வலும் இல்லை.

காணாமற்போன மக­னி­ட­மி­ருந்து அஞ்சல் மூலம் கடிதம் கிடைத்­தது.

முல்­லைத்­தீவு புது­மாத்­தளன் பகு­தி­யி­லி­ருந்து இரா­ணுவக் கட்­டுப்­பாட்­டிற்குள் சென்ற நிலையில் காணாமற்போன எனது மக­னி­ட­மி­ருந்து கடந்த மூன்று வரு­டத்­திற்கு முன்னர் கடிதம் ஒன்று கிடைக்­கப்­பெற்­ற­தாக ஆணைக்­கு­ழு­விடம் தந்­தை­யொ­ருவர் சாட்­சி­ய­ம­ளித்­துள்ளார்.

கோப்பாய் பிர­தேச செய­லக கேட்போர் கூடத்தில் இடம்­பெற்ற விசா­ரணை அமர்வில் ஆவ­ரங்கால் கிழக்கு பகு­தியைச் சேர்ந்த சின்­னத்­தம்பி தம்­பித்­துரை என்ற தந்தை மேலும் சாட்­சி­ய­ம­ளித்­த­தா­வது,

இறுதி யுத்­தத்­தின்­போது புது­மாத்­தளன் பகு­தி­யி­லி­ருந்து குடும்­ப­மாக இரா­ணுவக் கட்­டுப்­பாட்டுப் பகு­திக்குள் சென்றோம். இதன்­போது பல திசை­க­ளி­லி­ருந்து துப்­பாக்கிச் சூடு இடம்­பெற்ற நிலையில் எமது குடும்பம் மூன்று பிரி­வாக சிதறிச் சென்­றது. இந்­நி­லையில்என்னு­டைய மகனும் தவ­ற­வி­டப்­பட்டு காணா­மல்­போ­யி­ருந்தார்.

எனது மகன் தவிர மீண்டும் அனை­வரும் ஒன்று சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் கடந்த மூன்று- வரு­டத்­திற்கு முன்னர் எனது மக­னி­ட­மி­ருந்து அஞ்சல் ஊடாக கடிதம் ஒன்று கிடைக்­கப்­பெற்­றது. அக்­க­டி­தத்தில், வெலிக்­கந்தை பொலன்­ன­று­வை­யி­லி­ருந்து கடிதம் எழு­து­வ­தா­கவும் தன்­னுடன் ஐநூ­றுக்கும் மேற்­பட்­ட­வர்கள் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தன்னை எவ்­வா­றா­வது மீட்­கு­மாறு கோரி எழு­தி­யி­ருந்தார். எனவே உயி­ருடன் இருக்கும் எனது மகனை தய­வு­செய்து விரைவில் மீட் டுத் தாருங்கள் என அவர் கண்­ணீர்­மல்க கோரிக்கை விடுத்தார்.

சிவில் காரி­யா­ல­யத்தில் வைத்து எனது மகன் காணா­மற்­போ­யுள்ளார்.

கையெ­ழுத்து வைக்­கப்­ப­ட­வேண்­டு­மென இரா­ணு­வத்தால் கொடி­காமம் சிவில் காரி­யா­ல­யத்­திற்கு அழைக்­கப்­பட்ட மகன் காணா­மல்­போ­யுள்­ள­தா­கவும் இதன் பின்­ன­ணியில் தமது ஊரைச் சேர்ந்த மகா­லிங்கம் என்­பவர் செயற்­பட்­டுள்­ள­தா­கவும் தாய் ஒருவர் சாட்­சி­ய­ம­ளித்­துள்ளார்.

எழு­து­மட்­டுவாள் தெற்குப் பகு­தியைச் சேர்ந்த கந்­த­சாமி பரி­மளம் எனும் தாய் 2008 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி காணா­மல்­போன கந்­த­சாமி ஹரி­கரன் (வயது 18) என்ற தனது மகன் தொடர்பில் மேலும் சாட்­சி­ய­ம­ளித்­த­தா­வது,
என்­னு­டைய மகன் விடு­த­லைப்­புலி அமைப் பைச் சேர்ந்­தவர் எனக்­கூறி கொடி­காமம் இரா­ணுவ சிவில் காரி­யா­ல­யத்­திற்கு கையெ­ழுத்து இடு­மாறு அழைக்­கப்­பட்­ட­டி­ருந்தார். இதன்போது அவரை அழைத்துக் கொண்டு நானும் ஆரம்­பத்தில் சென்­றி­ருந்தேன்.

பின்னர் என்னை அங்கு வர­வேண்டாம் எனவும் மக­னை ­மட்டும் அனுப்பி வைத்தால் போதும் என அங்­கி­ருந்த இரா­ணுவ அதி­கா­ரிகள் என்­னிடம் தெரி­வித்­தி­ருந்­தனர். கையெ­ழுத்து இடு­வ­தற்கு மட்­டுமே என எண்ணி கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி தனி­யாக எனது மகனை அனுப்பி வைத்­தி­ருந்த நிலையில் அவர் அன்­றைய தினம் வீட்­டுக்குத் திரும்­ப­வில்லை.

இந்­நி­லையில் அவர் அங்­குள்ள இரா­ணு­வத்­தி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார் என்­பதை பின்னர் அறிந்­து­கொண்டேன். எனது மகனின் கைதின் பின்­ன­ணியில் எமது ஊரைச் சேர்ந்த மகா­லிங்கம் என்­பவர் செயற்­பட்­டுள்­ளமை தெரி­ய­வந்­தது. எனினும் அவர் தற்­போது எமது ஊரில் இல்லை. எங்­கு­சென்றார் என்­பதும் தெரி­யாது. அத்­துடன் குறித்த சிவில் காரி­யா­ல­யத்தில் குமார, நரையன் என இரண்டு இரா­ணுவ அதி­கா­ரி­க­ளையும் எனக்குத் தெரியும். இதே­வேளை எனது மகன் சாவ­கச்­சேரி சர­சாலைப் பகு­தி­யி­லேயே தற்­போதும் தங்­க­வைக்­கப்­பட்­டுள்ளார். எனவே தய­வு­செய்து அவரை அங்­கி­ருந்து மீட்டுத் தாருங்கள் என ஆணைக்­குழு அதி­கா­ரி­க­ளிடம் கோரிக்கை விடுத்­தி­ருந்தார்.

கோவிலில் தங்கி நின்ற மகன்­களை இரா­ணு­வமே பிடித்துச் சென்­றது.

மந்­து­விலில் அமைந்­துள்ள கோவிலில் தங்­கி­யி­ருந்து வேலை­செய்த தமது மகன்கள் உட்­பட 8 பேரை 2006 ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் திகதி இரவு இரா­ணு­வத்­தினர் சுற்­றி­வ­ளைப்பு என்ற பெயரில் பிடித்துச் சென்­றனர் என காணா­மற்­போன மூன்று பேரின் தாய்­மார்கள் சாட்­சியம் அளித்­தி­ருந்­தனர்.

கொடி­காமம் இரா­மச்­சந்­திரன் செல்­லம்மா என்ற தாய் சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,
இரா­மச்­சந்­திரன் இரா­ச­குமார் (வயது 24) என்ற எனது மகன் கோவிலில் இர­வு­வே­லைக்­காக தங்கி நின்­றுள்ளார். இதன்­போது அங்கு சென்ற இரா­ணு­வத்­தினர் அவர்­களைப் பிடித்துச் சென்­றுள்­ளனர். இத­னை­ய­டுத்து வரணி இரா­ணுவ முகா­மிற்கு சென்ற நாம் எமது பிள்­ளை­களை விடு­விக்­கு­மாறு கோரி­யி­ருந்தோம். எமது பிள்­ளை­களை தாங்கள் பிடிக்­க­வில்லை எனவும் இப்­ப­கு­திக்குள் மீண்டும் மீண்டும் வரு­வதை தவிர்த்துக் கொள்­ள­வேண்டும் என அவர்கள் தெரி­வித்­தி­ருந்­தனர்.

இத­னை­ய­டுத்து நாம் பொலி­ஸிலும் முறைப்­பாடு செய்­தி­ருந்தோம். அவர்­களும் இடை­யி­டையே விசா­ரணை என எம்­மோடு வந்து கலந்­து­ரை­யா­டி­விட்டுச் செல்­வார்கள். எனினும் காணா­மற்போன எனது மகன் உட்­பட எட்­டுப்பேர் தொடர்பில் எவ்­வித பதிலும் கிடைக்­கப்­பெ­ற­வில்லை எனத் தெரி­வித்தார்.

இதே­வேளை, மந்­து­விலில் அமைந்­துள்ள கோவிலில் தங்­கி­யி­ருந்து வேலை­செய்த காணாமற்போன தன்­னு­டைய மகனின் பெயர் உள்ளூர் பத்­தி­ரிகை ஒன்றில் வெளி­வந்­துள் ளது எனவும் கடத்­தி­ய­வர்கள் தற்­போது வரை மகனை உயி­ரு­ட­னேயே வைத்­துள்­ளனர் என மல்­லிகாதேவி என்ற தாய் காணாமற்போன சிவா­னந்தம் (வயது 24) என்ற மகன் தொடர் பில் சாட்­சி­ய­ம­ளித்­துள்ளார்.

மந்­துவில் வடக்கைச் சேர்ந்த கந்­த­சாமி லோக­நா­யகி என்ற தாய் காணா­மற்போன கந்­த­சாமி பரி­மே­ல­ழகர் (வயது 29) என்ற மகன் தொடர்பில் சாட்­சியம் அளித்­த­தா­வது,

என்­னு­டைய மகன் கோவிலில் நின்­றி­ருந்த அன்று இர­வு­வேளை பலத்த வெடிச் சத்­தங்கள் கேட்­டன. இத­னை­ய­டுத்து அதி­காலை எனது மகனைத் தேடி குறித்த கோவி­லுக்குச் சென்­றி­ருந்தேன். அங்கு எனது மகன் உட்­பட எட்­டுப்­பேரின் கைகளும் வயர்­க­ளினால் கட்­டப்­பட்­டி­ருந்­தன. இதன்­போது அங்­கு­வந்த "பவல்" வாக­னத்­திற்குள் இரா­ணு­வத்­தி­னரால் எமது பிள்­ளைகள் தூக்கிப் எறி­யப்­பட்­ட­தை­ய­டுத்து வர­ணியை நோக்கி பவல் வாகனம் சென்­ற­தாக கண்­ணீர்­மல்க குறித்த தாய் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார்.

சட­லங்­க­ளுக்­குள்ளும் எனது மகன் இல்லை.

இறுதி யுத்­தத்தின் போது மக்கள் நிறைந்­தி­ருந்த பகு­தி­க­ளினை இலக்கு வைத்து இரா­ணு­வத்­தினால் தொடர்ச்­சி­யாக மேற்­கொள்­ளப்­பட்ட கண்­மூ­டித்­த­ன­மான கிபிர் குண்டுத் தாக்­கு­தலில் 500 இற்கும் மேற்­பட்ட பொது மக்கள் உடல் சிதறி உயி­ரி­ழந்­தனர். இந்­நி­லையில் என்­னோடு ஒன்­றாக நின்ற எனது மகன் காணா­மற்­போ­யி­ருந்தார். அவர் எங்கே என தேடி­ய­போதும் காண­வில்லை. இந்­நி­லையில் சித­றிக்­கி­டந்த சட­லங்­க­ளையும் தேடிப்­பார்த்­ததேன் அங்கும் மகன் கிடைக்­க­வில்லை. எனவே எனது மகன் பிடித்துச் செல்­லப்­பட்­டுள்ளார் என்­ப­தையே நான் ஊகித்­துக்­கொண்டேன் என தாயொ­ருவர் சாட்­சியம் அளித்­துள்ளார்.

நெடுந்­தீவுப் பகு­தியைச் சேர்ந்த விக்டர் ஜேசு­தாஸன் மோட்ஷா இன்பம் என்ற தாயார் மேலும் சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,

இயுதி யுத்­தத்தின் போது சர­மா­ரி­யாக மேற்­கொள்­ளப்­பட்ட வான்­தாக்­குதல், மற்றும் துப்­பாக்கிப் பிர­யோ­கங்­க­ளினால் நாளுக்கு நாள் இடம்­பெ­யர்ந்து சென்று கொண்டே இருந்தோம்.

இவ்­வாறு இடம்­பெ­யர்ந்து செல்லும்போது வெட்ட வெளி­க­ளுக்குள் தரப்­பாள்­களை கட்­டி­விட்டு தங்­கி­யி­ருந்தோம்.இந்­நி­லையில் 2009 ஆம் ஆண்டு பங்­குனி மாதம் 22 ஆம் திகதி புது­மாத்­தளன் பகு­தியில் நாங்கள் தரப்பாள் கொட்­டிலில் இருந்தபோது இரா­ணு­வத்தின் கிபிர் தாக்­குதல் எங்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்­டது.

இதனால் தரப்பாள் கொட்­டில்­களில் இருந்த நாங்கள் உயிரைப் பாது­காத்துக் கொள்­வ­தற்­காக வெளியில் ஓடிச் சென்றோம். நீண்ட நேர­மாக தொடர்ந்த குண்­டுத்­தாக்­குதல் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட போது ஏரா­ள­மான மக்கள் மத்­தி­யிலும், நூற்­றுக்­க­ணக்­கான பிணங்­க­ளுக்கு மத்­தி­யிலும் காணாமற்போன எனது மக­னான உசாந்­தனை தேடி அலைந்தேன். இங்கு விதைக்­கப்­பட்­டி­ருந்த பிணங்­க­ளுக்குள் எனது மகனை தேடு­வ­தற்குள் அடுத்த கட்ட கிபிர் தாக்­குதல் மீண்டும் மக்கள் இருந்த பகு­தியில் மேற்­கொள்­ளப்­பட்­டது.

அத்­தாக்­கு­த­லிலும் பலர் கொல்­லப்­பட்­டார் கள். இறு­தி­யாக மாலை வரைக்கும் கிபிர் தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்தது. அன்­றைய தாக்­கு­தலில் உடல்கள் சிதறி உயி­ரி­ழந்து கிடந்த ஒவ்­வொரு சட­ல­மாக புரட்டிப் பார்த்தேன். அதில் என்­னு­டைய மகன் இல்லை. எனவே என்­னு­டைய மகன் பிடித்து செல்லப் ­பட்­டி­ருக்­கலாம் அல்­லது ஷெல்தாக்­கு­த­லுக் குப் பயந்து எங்­கா­வது சென்­றி­ருக்­கலாம் என்ற நிலையில் குண்­டுத்­தாக்­கு­த­லுக்கு மத்­தி­யிலும் 15 நாட்­கள்­வரை எனது மகனைத் தேடித்­தி­ரிந்தேன். எனினும் அவர் மீண்­டு­வ­ர­வில்லை என அவர் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார்.

காணாம­ற்போன மகனின்புகைப்­படம் பத்­தி­ரி­கையில் பிர­சு­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது.

முல்­லைத்­தீவு, புது­மாத்­த­ளனில் இறு­தி­யாக கண்­டி­ருந்த எனது மகனை உள்ளூர் பத்­தி­ரிகை ஒன்றில் பிர­சு­ரிக்­கப்­பட்ட புகைப்­படம் வாயி­லா­கவே கண்­டி­ருந்தேன் என ஆணைக்­கு­ழுவின் முன்­னி­லையில் தாயொ­ருவர் காண்ணீர் மல்க சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார்.

சாவ­கச்­சேரி பிர­தேச செயலர் பிரிவில் நடை­ பெற்ற விசா­ர­ணையில் சாவ­கச்­சேரிப் பகு­தியைச் சேர்ந்த ஆசி­ரி­ய­ரான ஸ்ரீஸ்­வரி புஸ்­ப­ராசா என்ற தாய் மேலும் சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,

யாழ்ப்­பா­ணத்தில் ஏற்­பட்ட இடப்­பெ­யர்­வினை அடுத்து வன்னி நோக்கி நாம் குடும்­ப­மாக இடம்­பெ­யர்ந்­தி­ருந்தோம். இந்­நி­லையில் காணா­மற்போன புஸ்­ப­ராசா அஜிந்தன் (வயது 18) என்ற எனது மகன் மல்­லாவி மத்­திய கல்­லூ­ ரியில் உயர்­த­ரத்தில் கல்வி கற்று வந்தார்.

இதன்­போது 2008 ஆம் ஆண்டு தை மாதம் 26 ஆம் திகதி விடு­த­லைப்­பு­லிகள் எனது மகனை பிடித்துச் சென்­றி­ருந்­தனர். இவ்­வாறு பிடித்துச் செல்­லப்­பட்ட எனது மகன் மீண்டும் எம்­மிடம் தப்­பித்து வந்­தி­ருந்தார். இத­னை­ய­டுத்து இரண்­டா­வது தட­வையும் விடு­த­லைப்­பு­லி­களால் எனது மகன் பிடித்துச் செல்­லப்­பட்டு மீண்டும் தப்­பித்து வந்த நிலையில் உற­வினர் வீட்டில் சுமார் ஒரு வருடம் அவரை மறைத்து வைத்­தி­ருந்தோம். எனினும் மூன்றாம் தட­வை­யா­கவும் விடு­த­லைப்­பு­லிகள் எனது மகனை கைது செய்­தி­ருந்­தனர்.

இந்­நி­லையில் அவர்­க­ளி­ட­மி­ருந்து மீண்டும் தப்­பித்து வந்த எனது மகனை முள்­ளி­ய­வளை புது­மாத்­தளன் பகு­தியில் 200-9ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி இறு­தி­யாகக் கண்­டி­ருந்தோம்.அதன்­போது அவ­ருடன் கதைப்­ ப­தற்­கான சந்­தர்ப்பம் எமக்குக் கிடைக்­க­வில்லை.

இந்­நி­லையில் நாம் இரா­ணுவக் கட்­டுப்­பாட்­டிற்குள் வந்­ததன் பின்னர் எமது உற­வினர் ஒரு வர், 2009 மே மாதம் புது­மாத்­தளன் பகு­தியில் எனது மகனை இரா­ணுவம் பிடித்து வைத்­தி­ருந்­ததை கண்­ட­தாகத் தெரி­வித்­தி­ருந்தார்.

இந்­நி­லையில் 2013, 2014 இல் உள்ளூர் பத்­தி­ரிகை ஒன்றில் கைகள் கட்­டப்­பட்­டி­ருந்த நிலையில் எனது மக­னுடன் பலர் நிலத்தில் இருத்தி வைக்­கப்­பட்­டுள்ள புகைப்­படம் ஒன்று பிர­சு­ரிக்­கப்­பட்டு வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது.

இத­னை­ய­டுத்து குறித்த பத்­தி­ரி­கையின் ஆதா­ரத்­தோடு எனது மகனை மீட்­டுத்­த­ரு­மாறு மனித உரிமை ஆணை­ய­கத்­திலும் வேறு பல இடங்­க­ளிலும் முறை­யிட்­டி­ருந்தேன். எனினும் இது­வரை எந்தப் பதிலும் எமக்குக் கிடைக்­கப்­பெ­ற­வில்லை. தயவு செய்து எனது மகனை திருப்பித் தாருங்கள். எனது மகன் உயி­ரு­ட­னேயே உள்ளார் என குறித்த தாயார் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார்.

காணாமல் போன எனது மகளை வெலிக்­கடைச் சிறையில் கண்டேன்.

வன்­னியில் காணாமல் போன எனது மகளை வெலிக்­கடை சிறைச்­சா­லையில் கண்­டி­ருந்தேன். அப்­போது அவர் வெள்ளை நிற உடையில் வெள்ளை நிற மாலை அணிந்து வாக­னத்தில் அழைத்துச் செல்­லப்­பட்டார் என தாய் ஒருவர் சாட்­சி­ய­ம­ளித்­துள்ளார்.

சாவ­கச்­சேரி பிர­தேச செயலர் பிரிவில் நடை­பெற்ற விசாணை ஆணைக்­கு­ழுவில் கொடி­காமம் பகு­தியைச் சேர்ந்த தாய் ஒருவர் மேலும் சாட்­சி­ய­ம­ளித்­தா­வது,

எனது மகள் அனு­சியா கிளி­நொச்­சியில் அரச துறையில் பணி­பு­ரிந்து கொண்டு எனது சகோ­த­ரி­யோடு வாழ்ந்து வந்­துள்ளார். இந்­நி­லையில் கடந்த 2007 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 23ஆம் திகதி அவர் காணாமல் போயி­ருந்தார்.

இவ்­வாறு இருக்­கையில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆவனி மாதம் வெலிக்­கடை சிறைச்­சா­லைக்கு பதிவு ஒன்று மேற்­கொள்­வ­தற்­காக நான்­சென்­றி­ருந்தேன்.இதன்­போது எனது மகளை அங்கு கண்­டி­ருந்தேன். எனினும் எனது மகள் என்னைக் காண­வில்லை. அவர் சற்று தூரத்­தி­லேயே நின்­றி­ருந்தார். அப்­போது அவர் வெள்ளை நிற உடை­ய­னிந்­தி­ருந்­த­துடன் வெள்ளை நிறத்தில் மாலையும் அணிந்­தி­ருந்தார். இந்­நி­லையில் எனது மகள் உட்­பட சிலரை அங்கு வந்த அதி­கா­ரிகள் வாக­ன­மொன்றில் ஏற்­றிக்­கொண்டு சென்­றனர்.

இதன்­போது அங்கு நின்ற அதி­கா­ரி­க­ளிடம் இவர்கள் எங்கு கூட்டிச் செல்­லப்­ப­டு­கி­றார்கள் என கேட்­ட­போது நீதி­மன்­றத்­துக்கு கூட்டிச் செல்­வ­தாக அந்த அதி­காரி பதில் வழங்­கி­யி­ருந்தார்.இதன்­போது அந்த அதி­கா­ரி­யிடம் எனது மகளின் பெயர் விப­ரத்தை கூறி வாக­னத்தில் அழைத்துச் செல்­லப்­ப­டு­ப­வரில் எனது மகளும் ஒருவர் எனக் கூறி­யி­ருந்தேன். அதற்கு அந்த அதி­காரி அத்­த­கைய பெயர் வழியில் ஆட்கள் இல்லை எனத் தெரி­வித்தார். அவ­ரு­டைய கூற்று அவ்­வா­றாக அமைந்­தி­ருந்­தாலும் நான் கண்­டது எனது மகளைத் தான். அது எனக்கு நன்­றாக தெரியும் எனத் தெரி­வித்­தி­ருந்தார்.

மக­னுக்­காக மகளை பிடித்துச் சென்­றனர்.

மானிப்பாய் பகு­தியில் வாடகை வீட்டில் தங்­கி­யி­ருந்­த­போது இரவு வேளை வீட்­டிற்கு வந்த மூவர் மகன் எங்கே எனக் கேட்­டனர். அவர் வீட்டில் இல்­லை­யெனத் தெரி­வித்­த­போது எனது மகளை பிடித்துச் சென்­றனர் என சுப்­பி­ர­ம­ணியம் இளை­ய­பிள்ளை என்ற தாயொ­ருவர் சாட்­சி­ய­ம­ளித்தார்.

அவர் தொடர்ந்து சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,

எமது சொந்த இடம் சர­சாலை வடக்கு ஆகும். 2008 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் மானிப்­பாயில் வாடகை வீட்டில் தங்­கி­யி­ருந்தோம். இதன்­போது 2008 ஆம் ஆண்டு ஐந்தாம் மாதம் 23 ஆம்­தி­கதி இர­வு­வேளை எமது வீட்­டிற்கு வந்த மூவர் எனது மகன் எங்கே எனக் கேட்­டி­ருந்­தனர்.

மகன் வெளியே போயுள்ளார் எனத் தெரி­வித்­தி­ருந்தேன். இதன்­போது எனக்­க­ருகில் நின்ற எனது மக­ளான சுப்­பி­ர­ம­ணியம் பிரே­ம­ரா­ஜி­னியை (கடத்­தப்­படும் போது வயது 22) வலுக்­கட்­டா­ய­மாக குறித்த மூவரும் பிடித்துச் சென்­றனர். இதன்­போது எனது மகளை விட்­டு­வி­டுங்கள் என அவர்­க­ளிடம் கெஞ்­சி­ய­போது அவர்கள் துவக்கைக் காட்டி சத்தம் போட­வேண்டாம் என அச்­சு­றுத்­தினர். இவ்­வாறு வந்த மூவரும் இரா­ணு­வத்­தினர் என்­பது எனக்கு நன்­றாகத் தெரியும்.

எனது மகளை அவர்கள் இப்­போதும் தடுத்து வைத்­துள்­ளனர். தய­வு­செய்து அவர்­க­ளி­ட­மி­ருந்து மகளை மீட்­டுத்­தா­ருங்கள் என அவர் ஆணைக்­கு­ழு­விடம் கோரி­யி­ருந்தார்.

வரணி முகாமில் இரா­ணு­வமே பிடித்­தது.

வேம்­பிராய்ப் பகு­தியில் நின்ற எனது கண­வரை வரணி முகாமில் நின்ற இரா­ணு­வத்­தி­னரே பிடித்துச் சென்­ற­துடன் அவரை அங்கு ஒரு வருடம் தடுத்து வைத்­துள்­ளனர் என மகேந்­திரம் சோம­க­லா­வதி என்ற பெண் சாட்­சி­ய­ம­ளித்தார்.

அவர் மேலும் சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,

எனது கணவர் தும்­புத்­த­டி­யினை தயா­ரிக்கும் வேலை­யினைச் செய்து வந்தார். அதன் நிமித்தம் தடிகள் வெட்­டு­வ­தற்­காக வேம்­பிராய்ப் பகு­திக்கு சென்­றி­ருந்தார். இதன்­போதே இரா­ணு­வத்­தினர் எனது கண­வரை கடந்த 2007 ஆம் ஆண்டு பங்­குனி மாதம் 2 ஆம் திகதி பிடித்துச் சென்­றுள்­ளனர். அவர் பிடித்துச் செல்­லப்­பட்­டதை அப்­ப­கு­தியில் நின்­ற­வர்­களே என்­னிடம் தெரி­வித்­தனர்.

அத்­துடன் அவர் பிடிக்­கப்­பட்ட இடத்­திற்கு முன்னும் பின்னும் இரண்டு இரா­ணுவ சோதனைச் சாவடி முகாம்கள் இயங்கி வந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. குறித்த இரு சோதனைச் சாவடி முகாம்­களின் தலை­மைப்­பீ­ட­மாக கச்சாய் இரா­ணுவ முகாமே இயங்கி வந்­தது. இதன் தலைமை அதி­கா­ரி­யாக ராம­நா­யக்க செயற்­பட்­டி­ருந்தார்.

எனது கணவன் பிடித்துச் செல்­லப்­ப­டது முதல் இன்­று­வரை பொரு­ளா­தார ரீதியில் நலி­வுற்­ற­வர்­க­ளா­கவே வாழ்ந்து வரு­கின்றோம். தொடர்ச்­சி­யாக விசா­ரணை ஆணைக்­குழு எனக்­கூறி காலத்தை இழுத்­த­டிக்­காமல் உயி­ரோடு இருக்கும் எனது கன­வனை மீட்டுத் தாருங்கள் என அவர் சாட்­சி­ய­ம­ளித்தார்.

மகனைத் தேடிச் சென்ற என்னை இரா­ணு­வத்­தினர் விரட்­டி­ய­டித்­தனர்.

சாவ­கச்­சேரி தனங்­கி­ளப்புப் பகு­தியால் சென்ற மகனை சோத­னைச்­சா­வ­டியில் நின்ற இரா­ணு­வத்­தினர் பிடித்­துள்­ள­தாக உற­வி­னர்கள் தெரி­வித்­தனர். இந்­நி­லையில் அவ­ரைத்­தேடி சாவ­கச்­சேரி இரா­ணு­வ­மு­கா­முக்குச் சென்­ற­போது பிடிக்­கப்­பட்ட மகன் பலாலி இரா­ணுவ முகா­மிற்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் எனவே இங்கு வர­வேண்டாம் என அங்­கி­ருந்த இரா­ணுவ அதி­காரி ஒருவர் தடி­கொண்டு விரட்­டி­ய­டித்தார் என அச்­சு­வேலிப் பகு­தியில் வசித்து வரும் சின்­னத்­துரை கமலா தேவி என்ற தாய் சாட்­சி­ய­ம­ளித்தார்.

அவர் அங்கு மேலும் சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,

1996 ஆம் ஆண்டு 7 ஆம் மாதம் 30 ஆம் திகதி வேலை நிமித்தம் சாவ­கச்­சேரி தனங்­கி­ளப்பு பகு­தி­யூ­டாக எனது மக­னான சின்­னத்­துரை செல்­வ­நாதன் (வயது 24) சென்­றி­ருந்தார். இதன்­போது அப்­ப­கு­தியில் அமைக்­கப்­பட்­டி­ருந்த இரா­ணுவ சோதனைச் சாவ­டியில் நின்ற இரா­ணு­வத்­தி­னாரால் எனது மகன் பிடித்துச் செல்­லப்­ப­டு­வ­தாக அங்கு நின்­ற­வர்கள் என்­னிடம் வந்து தெரி­வித்­தனர்.

இந்­நி­லையில் குறித்த சோதனைச் சாவ­டிக்­கான பிர­தான முகா­மாக சாவ­கச்­சே­ரியில் அமைந்­தி­ருந்த இரா­ணுவ முகா­மிற்கு நான் சென்­றி­ருந்தேன். இதன்­போது அங்­கி­ருந்த இரா­ணுவ அதி­காரி ஒருவர் "நீங்கள் செல்­வ­நா­தனின் அம்­மாவோ" என கேட்­ட­துடன் "உங்­க­ளு­டைய மகனை பலாலி இரா­ணுவ முகா­மிற்கு அனுப்பி வைத்­துள்ளோம்" என அவர் தெரி­வித்­தி­ருந்தார்.

இதன்­போது எனது மகன் உங்­க­ளு­டைய இரா­ணுவ முகா­மி­லேயே இருக்­கின்றார் தய­வு­செய்து அவரை என்­னுடன் அனுப்பி வைத்­து­வி­டுங்கள் என அந்த இரா­ணுவ அதி­கா­ரி­யிடம் கூறி­ய­போது அவர் தடி­யொன்­றினை எடுத்து அடிக்க ஓங்­கி­ய­துடன், இனிமேல் இப்­ப­கு­திக்குள் வரக்­கூ­டாது என என்னை விரட்­டி­ய­டித்தார்.

என்­னு­டைய மக­னுடன் பலரும் கைது­செய்­யப்­பட்­டி­ருந்­தனர். அவர்­களும் இது­வரை விடு­விக்­கப்­ப­ட­வில்லை. அர­சாங்கம் காணா­மல்­போனார் தொடர்பில் வழங்­கு­கின்ற பிச்சைக் காசு எமக்குத் தேவை­யில்லை. எனக்கு பிடித்து செல்­லப்­பட்ட என்­னு­டைய காணாமல் போன மகன் தான் வேண்டும். அது­வரை அவரை கண்­டு­பி­டிப்­ப­தற்­கான போராட்டம் ஓயாது எனத் தெரி­வித்தார்.

கச்சாய் இரா­ணு­வத்­தி­டமே சகோ­த­ரனை ஒப்­ப­டைத்தேன்.

கச்­சா­யி­லி­ருந்த இரா­ணுவ முகா­மிற்கு பொறுப்­பாகச் செயற்­பட்ட இரா­ணுவ அதி­காரி கேணல் சில்­வா­வி­டமே எனது சகோ­த­ரனை விசா­ர­ணைக்­காக ஒப்­ப­டைத்­தி­ருந்தேன். இந்­நி­லையில் எனது சகோ­தரன் தப்­பி­யோடி விட்­ட­தாக அந்த இரா­ணுவ அதி­காரி தெரி­வித்­த­தாக சகோ­தரர் ஒருவர் ஆணைக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளித்­துள்ளார்.

அவர் தனது சாட்­சி­யத்தில் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

எனது சகோ­தரன் பொன்­னுத்­துரை மகா­தேவன் வன்­னியில் இருந்­து­விட்டு என்­னோடு தங்­கி­யி­ருக்க 1996 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் யாழ்ப்­பாணம் வந்­தி­ருந்தார். அக்­கா­லப்­ப­கு­தியில் புதி­தாக வீட்டில் தங்­கி­யி­ருக்க யார் வந்­தாலும் அவர்­களை தம்­மிடம் வந்து பதி­யு­மாறு இரா­ணு­வத்­தினர் அறி­வித்­தி­ருந்­தனர்.
இந் நிலையில் எனது சகோ­த­ரரை 1996ஆம் ஆண்டு 7ஆம் மாதம் 20 ஆம் திகதி கச்சாய் இரா­ணுவ முகா­மிற்கு அழைத்து சென்று பதிவு நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்தேன். அதன்­போது எனது சகோ­தரை விசா­ரணை செய்­ய­வேண்டும் எனவும் மறுநாள் என்னை வரு­மாறும் அந்த இரா­ணுவ முகாம் அதி­கா­ரி­யான கேணல் சில்­வாவும் புல­னாய்வு அதி­கா­ரி­யான மங்­கள என்­ப­வரும் என்­னிடம் கூறி­னார்கள்.

நான் அவர்கள் கூறி­ய­தற்­க­மை­வாக சகோ­த­ரனை அங்கு விட்டு விட்டு மறு நாள் அவரை கூட்டிச் செல்ல இரா­ணுவ முகா­மிற்குச் சென்­றி­ருந்தேன். இதன்­போது அங்­கி­ருந்த இரா­ணுவ அதி­கா­ரிகள் எனது சகோ­தரன் இர­வோடு இர­வாக தப்­பி­யோடி விட்­ட­தாக என்­னிடம் கூறி­னார்கள்.

இக் கதை முட்­டாள்­க­ளுக்கு கூறும் கதை­யாகும். ஏனெனில் இரா­ணுவ முகாம் என்­பது மிகுந்த பாது­காப்­புக்குள் அமைக்­கப்­பட்­டி­ருக்கும். அந்­த­வ­கையில் அதி­லி­ருந்து ஒருவர் தப்­பி­யோ­டு­வென்­பது சாதா­ரன விட­ய­மல்ல. இந்­நி­லையில் எனது சகோ­தனைத் தேடி பல இடங்கள் அலைந்து திரிந்தும் அவர் இது­வரை கிடைக்­க­வில்லை.

இதே­வேளை இரா­ணுவ அதி­கா­ரி­யான சில்­வாவை கடந்த 2013ஆம் ஆண்டு பூந்­தோட்டம் படை முகாமில் கண்டேன். அவர் அங்கு முகாமின் பொறுப்­ப­தி­கா­ரி­யாக இருந்தார். எனவே எனது சகோ­தரன் எங்கு உள்ளார் என்­பதை குறித்த அதி­கா­ரியை விசா­ரணை செய்­வதன் மூலம் அறிந்து கொள்­ள­மு­டியும் என அவர் தனது சாட்­சி­யத்தில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

முறைப்­பா­டு­களின் விசா­ர­ணை­களை விசேட விசா­ர­ணைக்­கு­ழுவே மேற்­கொள்ளும் மெக்ஸ்வல் பர­ண­கம தெரி­விப்பு.

காணாமல் போனோர் தொடர்­பாக பர­ண­கம ஆணைக்­கு­ழு­விடம் உற­வி­னர்­களால் முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் அடுத்­த­ப­டி­யாக ஜனா­தி­ப­தியின் கீழ் செயற்படும் விசேட விசாரணைக்குழுவே விசாரணையை மேற்கொள்ளும் என மெக்ஸ்வல் பரணகம தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது.

காணாமல்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு மூன்று கட்டங்களாக விசாரணைகளை நெறிப்படுத்தியுள்ளது. அந்தவகையில் முதலில் மக்களுடைய முறைப்பாடுகளை உள்வாங்கியது. இதன்போது எழுத்து மூலமாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றது. அத்தகைய தரவுகளை அடிப்படையாக வைத்து காணாமல்போனோரின் உறவுகளிடம் வாய்மூலமான பதிவுகளை ஆணைக்குழு இரண்டாம் கட்டமாக கடந்த நான்கு நாட்களாகவும் அதற்கு முன்னரும் பதிந்து கொண்டது.

இவ்வாறு பதியப்பட்ட தரவுகளின் பின்னர் அதனை விசாரணை செய்வதற்காக ஒரு விசேட விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்படும். அது ஜனாதிபதியின் ஆற்றுகையின் கீழேதான் அந்த விசாரணைக்குழு உருவாக்கப்படும். அந்த விசாரணைக்குழுதான் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும்.

தற்போது காணாமல்போன உறவுகள் வழங்கும் முறைப்பாடுகள் அனைத்தும் குற்றச்சாட்டுக்களே. இந்த குற்றச்சாட்டுக்களை வைத்து யார் குற்றவாளிகள் என்பதை விசாரணை செய்வதே குறித்த விடேச விசாரணைக்குழுவின் பணியாகும். இத்தகைய விசேட விசாரணைக்குழுவின் முடிவுகள் மீண்டும் எமது ஆணைக்குழுவிடம் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் முடிவுகளை நாம் ஜனாதிபதியிடம் கையளிப்போம். அதன்பின்னர் ஜனாதிபதி எத்தகைய தீர்மானத்தை முன்வைப்பார் என்பதை அவரே தீர்மானிப்பார்.

மேலும் எமது ஆணைக்குழு முன் மக்களினால் வழங்கப்பட்ட குற்றச் சாட்டுக்கள் மூன்று வகையாகவே பொதுமைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒன்று இராணுவத்தினர் மீதான குற்றச்சாட்டு, இரண்டாவது விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சாட்டு, மூன்றாவது பொதுவான கடத்தல்கள் (பின்னணியில் ஒட்டுக்குழுக்கள்) என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இத்கைய குற்றச்சாட்டுக்கள் இடத்துக்கிடம் மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபட்டவையாக உள்ளன.

காணாமல் போனோர் விடயம் தொடர்பில் வெளிநாட்டு நீதிபதிகள் வரவேண்டிய அவசியமில்லை. அத்தோடு இலங்கையில் எந்த இனமானலும் சரி எந்த சமூதாயமாக இருந்தாலும் சரி அவர்களுக்கான நீதி வழங்கலில் வெளிநாட்டு நீதிபதிகள் தலையிடுவதை நான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ஆனால் எமது சட்ட ரீதியான செயற்பாடுகளுக்கு அவர்களின் உதவி பெறப்படும்.

மேலும் காணாமல் போனவர்களை கண்டறிவதற்கான அமைச்சு ஒன்று உருவாக்கப்படவுள்ளது. அவ் அமைச்சு உருவாக்கப்பட்டதும் அதனிடம் எமது சகல அறிக்கைகள், விபரங்கள் ஒப்படைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.