Breaking News

மக்களின் கடும் எதிர்ப்பால் காணி அளவீடு இடைநிறுத்தம்!

யாழ்.கீரிமலை சேந்தாங்குளம் பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான 4 பரப்பு காணியை கடற்படைக்கு சுவீகரிப்பதற்காக அளவீடு செய்ய கடற்படையினர் மற்றும் நில அளவையாளர்கள் மேற்கொண்ட முயற்சி பொதுமக்களின் எதிர்ப்பை தொடர்ந்து கைவிடப்பட்டுள்ளது.

கடற்படையினரின் தேவைகளுக்காக சேந்தான் குளம் பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான 4 பரப்பு காணியை சுவீகரிப்புச் செய்வதற்காக இன்றைய தினம் அளவீடு செய்யவுள்ளதாக கடந்த 24.02.2016ம் திகதி காணி உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு நில அளவையாளர்கள் குறித்த பகுதிக்கு வந்திருந்த நிலையில் காணி உரிமையாளர்கள் மற்றும் வலி, வடக்கு மீள்குடியேற்ற குழு தலைவர் சஜீவன், மாகாணசபை உறுப்பினர் கஜதீபன் ஆகியோர் திரண்டு மேற்படி நில அளவீட்டுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்நிலையில் அளவீட்டு பணிகளை நிறுத்தி நில அளவையாளர்கள் திரும்பிச் சென்றுள்ளனர். இதேவேளை இன்றைய தினம் நில அளவீட்டுக்கு எதிர்ப்பை தெரிவித்த மக்களை கடற்படையினர் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தினர். இந்நிலையில் ஆத்திரமடைந்த மக்கள் எங்களுடைய நிலத்தை விட்டு வெளியேறி, இராணுவமே நீ உன் வீட்டுக்கு செல் என கோஷமிட்டனர்.