தீர்வுத்திட்ட வரைபிற்கு பங்களிப்பை வழங்குமாறு பேரவை வேண்டுகோள்!
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட முன்வரைபு தொடர்பான மக்கள் கருத்தறியும் செயன்முறை எதிர்வரும் 31 திகதியுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர் குழுவானது மக்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களின் அடிப்படையில் தீர்வுத்திட்ட முன்வரைபின் இறுதி வடிவத்தை மிகவிரைவில் வெளியிடவுள்ளது.
பேரவையின் உறுப்பினர்கள் வடக்கு, கிழக்கில் பல கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர்.மாவட்ட மட்டத்திலான கலந்துரையாடல்கள் பிரதேச மட்டத்திலான சமூகத் தலைவர்களுடனான கலந்துரையாடல்கள் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு பல்கலைக்கழக சமூகத்தினரும் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதேவேளை தொழில்சார் நிபுணர்களுடனான கலந்துரையாடல்கள், அரச சார்பற்ற நிறுவனங்களுடனான கலந்துரையாடல்கள் மீனவர்கள் மற்றும் விவசாயிகளுடனான கலந்துரையாடல்கள் என பல தரப்பட்ட கலந்துரையாடல்கள் மிகவும் ஆரோக்கியமாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பிலான விபரங்களை (www.tamilpeoplescouncil.org) என்ற இணையத்தளத்தில் தரவேற்றம் செய்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது நிபுணர்களுடன் நீங்களும் உங்கள் சார்ந்த அமைப்பாக கலந்தாலோசிக்க வேண்டுமெனில் 075-6993211 என்ற தொலைபேசியூடாகவோ அல்லது (contact@tamilpeoplescouncil.org) என்ற மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.சில நாட்கள் மாத்திரம் உள்ளநிலையில் காலம் தாழ்த்தாது தொடர்பு கொண்டு, வரலாற்றில் முதற் தடவையாக மக்கள் கலந்துரையாடல் மூலம் மக்களின் குரலாக வெளியாகவிருக்கும் இத்தீர்வுத்திட்டத்திற்கு பங்களிப்பை வழங்குமாறு தமிழ்மக்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.