Breaking News

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டம்!

சர்வதேச மகளிர் தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படும் நிலையில், இலங்கையிலும் பல்வேறு மட்டத்தில் இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

ஆனால், வடக்கு, கிழக்கு பகுதிகளில் இன்றைய தினத்தை ஒரு கொண்டாட்டமாக அனுஷ்டிக்காமல் பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான அடக்குமுறையை வெளிப்படுத்தும் தினமாக அனுஷ்டித்து வருகின்றனர்.

இதற்கமைய கண்டன ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் வடகிழக்கின் பல பகுதிகளில் இடம்பெற்று வருகின்றன.

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பரவேஸ்வரர் சந்தியில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

‘இருண்ட பங்குனி’ என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டமானது வட மாகாண பெண்கள் மாற்றத்திற்கான பரிந்துரை செய்யும் வலையமைப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு ஆகியனவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது ‘பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எமது சமூகத்தில் நிகழ அனுமதிக்க மாட்டோம்’, ‘பெண்களுக்கெதிரான வன்முறையாளர்களாக நாங்கள் இருக்க மாட்டோம்’, ‘பெண்களுக்கெதிரான வன்முறையாளர்களாக எமது ஆண்கள் மாற அனுமதிக்க மாட்டோம்’, பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு எதிரான நீதி கிடைக்கும் வரை நாம் ஓயமாட்டோம்’ போன்ற கோசங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பியிருந்தனர்.






கிளிநொச்சி

பெண்களிற்கு எதிரான வன்முறைகளை கண்டித்து இன்று காலை கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

‘நீதிக்கான பயணம்’ எனும் தொனிப்பொருளில் பெண்களுக்கு சரியான நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என்ற கோஷத்துடன் குறித்த போராட்டத்தினை கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அமைப்பினர் மேற்கொண்டுள்ளனர்.


ஏ9 வீதியில் பழைய மாவட்ட செயலகம் முன்பாக காலை 11 மணிக்கு ஆரம்பமாகிய குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பெண்கள் கறுப்புப்பட்டியால் வாயைக் கட்டிக்கொண்டும், கறுப்பு ஆடையை அணிந்து கொண்டும் கலந்து கொண்டனர்.

பெண்கள் சிறுவருக்கு எதிரான பாலியல் வன்முறையை தேசிய பிரச்சனையாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தின் நிறைவில் ஜனாதிபதிக்கு கிடைக்கும் வகையில் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜரையும் கையளித்துள்ளனர்.

குறித்த மகஜரில் இம்மாதத்தினை பெண்கள், கறுப்பு பங்குனியாக பிரகடனப்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



மன்னார்

சர்வதேச பெண்கள் தினமான இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கக்கோரி மன்னார் மாவட்ட மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கறுப்புப்பட்டி போராட்டம் இடம்பெற்றுள்ளது.

மன்னார் மாவட்ட மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் மாவட்ட இணைப்பாளர் குருஸாந்தன் மஹாலட்சுமி தலைமையில் இன்று காலை 10 மணியளவில் மன்னார் பிரஜைகள் குழுவிற்கு முன்பாக இப்போராட்டம் ஆரம்பமானது.

இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் தமது வாயை கறுப்பு துணியினால் கட்டி அமைதியான முறையில் பேரணியில் கலந்து கொண்டனர். குறித்த பேரணி பிரதான வீதியூடாக சென்று மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தை சென்றடைந்தது.

பின்னர், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கக்கோரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் தமது கோரிக்கை அடங்கிய துண்டுப்பிரசுரங்களை கையளித்தனர்.

இதனைத்தொடர்ந்து குறித்த ஊர்வலம் மன்னார் பஸார் வீதியூடாக சென்று மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்னர் ஒன்று கூடியது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவிடம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கக்கோரி துண்டுப்பிரசுரங்களை கையளித்தனர்.

குறித்த அமைதி ஊர்வலத்தில் மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பி.ஏ.அந்தோனி மார்க் உட்பட பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




மட்டக்களப்பு

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மட்டக்களப்பில் பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன பேரணி என்னபவற்றில் ஈடுபட்டனர். ஆர்ப்;பாட்டக்காரர்கள் கறுப்பு ஆடை அணிந்திருந்ததுடன் கறுப்புக்கொடிகளையும் ஏந்தியிருந்தனர்.


மட்டக்களப்பு சூர்யா பெண்கள் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கண்டன ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவில் நடைபெற்றது.

மகளிருக்கு எதிரான வன்முறைகள், பாலியல் கொடுமைகள் உட்பட பெண்களுக்கெதிரான துஷ்பிரயோகங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.