Breaking News

நல்லுறவை கட்டியெழுப்ப புத்தாண்டில் ஒன்றுபடுவோம்: சம்பந்தன்

சிதைந்து போயுள்ள சமூகங்களுக்கிடையிலான நல்லுறவை கட்டியெழுப்ப சகலரும் முன்வர வேண்டுமென சித்திரைப் புத்தாண்டில் தான் அழைப்பு விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழ் சிங்கள மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். மலர்ந்திருக்கும் இந்த இனிய ஆண்டு சகலருக்கும் செழிப்பு மிக்க ஆண்டாக அமைய வேண்டுமென வாழ்த்துகிறேன்.

சித்திரைப் புத்தாண்டானது வெறுமனே ஒரு பண்டிகையாக அல்லாமல் கலை, கலாசாரம் பாரம்பரிய விளையாட்டுக்கள் என பல்வேறு அம்சங்களோடு பின்னிப்பிணைந்துள்ளமை பல நூற்றாண்டு மேன்மையான எமது வரலாற்றுச் சான்றாக இருப்பது ஒரு சிறப்பம்சமாகும்.

எமக்கே உரித்தான எமது பாரம்பரியங்களோடு தனித்துவமான சமூகங்களாக நாம் சித்திரைப் புத்தாண்டை கொண்டாடுவோம். சித்திரைப் புத்தாண்டானது தமிழ், சிங்கள மக்களை இணைக்கும் ஒரு பண்டிகையாக மட்டுமன்றி சமூகங்களை இணைக்கும் ஒரே பண்டிகை என்பதையும் பெருமையோடு நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே மலர்ந்துள்ள இந்த புத்தாண்டில் கடந்த காலங்களிலேயே பல்வேறு சம்பவங்களின் நிமிர்த்தம் சிதைந்து போயுள்ள சமூகங்களுக்கு இடையேயான நல்லுறவை கட்டியெழுப்ப அனைவரும் முன்வர வேண்டுமென நான் அழைப்பு விடுக்கிறேன்.

மேலும் மகிழ்ச்சியோடு இப்புத்தாண்டை வரவேற்றுக்கொண்டாலும் பல்வேறு சூழ்நிலைகளின் நிமிர்த்தம் இப்புத்தாண்டு தினத்தை மகிழ்ச்சியோடு கொண்டாட முடியாத நிலையிலுள்ள எமது உறவுகளையும் நினைவில் வைத்துக்கொள்வோமாக.

மலர்ந்துள்ள இப்புத்தாண்டு அனைவரதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறுகின்ற சுபீட்சமான ஆண்டாக அமைய வேண்டுமென பிரார்த்திக்கிறேன்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.