Breaking News

அமெரிக்காவின் அறிக்கையும் தயங்கும் இலங்கையும்!

இலங்கை தொடர்பில் கடந்த வாரம் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி வெளியிட்டுள்ள அறிக்கைக்கு, இலங்கை அரசாங்கம் இன்னும் பதிலளிக்காமல் தயக்கம் காட்டி வருவரும் நிலையில், பல விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.

குறித்த அறிக்கையில், இலங்கையில் இன்னும் பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டதோடு, இராணுவத்தினர் மீதும் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அவ் அறிக்கையை ஆராய்ந்த பின்னரே கருத்துத் தெரிவிக்க முடியுமென அண்மையில் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தார். அத்தோடு, அறிக்கையை முழுமையாக ஆராயாமல், எதனையும் குறிப்பிட முடியாதென பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் குறித்தான குற்றச்சாட்டு தொடர்பில், இராணுவ தரப்பும் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்க மறுத்து வருகின்றது.

இச்செயற்பாடானது, இலங்கை மீது நல்லெண்ணம் கொண்டுள்ள நாடுகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்துமென அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கடந்த ஐ.நா அமர்வுகளின் போது இலங்கைக்கு எதிராக பிரேரணைகளை கொண்டுவந்த அமெரிக்கா, ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கைக்கு ஆதரவாக பிரேரணை கொண்டுவந்ததோடு அதற்கு இலங்கையும் அனுசரணை வழங்கியிருந்தது. தமிழர் விடயத்தில், இலங்கை மீது கடந்த காலங்களில் அதிருப்தி கொண்டிருந்த அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள், ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கைக்கு பல ஒத்துழைப்புகளை வழங்கி வந்த நிலையில், அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றன.

புதிய அரசாங்கம் ஆட்சியேற்று இரண்டாவது வருடத்தின் காலாண்டில் நடைபோட்டுக்கொண்டிருக்கும் இத்தருணத்தில், அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையானது அரசாங்கத்தில் தாக்கம் செலுத்தியுள்ளதோடு, அநேகமான நாளைய தினம் இதற்கு அரசாங்கத்திடமிருந்து கருத்து வெளிவரலாமென நம்பப்படுகிறது.