Breaking News

ஈ.பி.டி.பியிலிருந்து வெளியேறுகிறார் சந்திரகுமார்

தமிழ் மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து தனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.


தனது புதிய நிலைப்பாடு குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களுக்குரிய நியாயமான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு அர்த்தபூர்வமாக செயற்படவுள்ளதாகவும் இதற்கான புதிய சூழ்நிலைகள் உருவாகி வரும் சந்தர்ப்பத்தில் பல்வேறு சக்திகளையும் அவற்றின் தனித்தன்மைகளுடன் ஒன்றிணைய வைத்துச் செயலாற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது ஸ்ரீலங்காவில் உருவாகியிருக்கும் புதிய அரசியற் சூழ்நிலைக்கு அமைய ஈழமக்கள் ஜனநாயக் கட்சியிலிருந்து விலகி தனித்துச் செயற்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மக்களுடைய உணர்வுகளில் தமக்கான நியாயமான அரசியல் தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாடு மிக நீண்டகாலமாகவே இருப்பதாக குறிப்பிட்ட அவர்,

இதில் எந்தச் சமரசத்துக்குப் போவதையும் அவர்கள் விரும்பவில்லை எனவும் இன்றைய உலக ஒழுங்கின் அடிப்படையில் சமூகங்களுக்கான சமத்துவ, பன்மைத்துவத்தை ஏற்றுக்கொண்டு அதனூடான சுயநிர்ணய அங்கீகாரத்தை அவர்கள் வேண்டி நிற்பதாகவும் கருத்து வெளியிட்டார்.

மக்களுடைய உணர்வுகளும் தெரிவும் வேறாக இருந்ததைத் தேர்தலில் உணர்ந்து கொண்டதாகவும் மக்கள், தன்னிடம் வேறு விடயங்களையும் எதிர்பார்க்கின்றனர் என்பதை உணர்ந்து கொண்டதன் அடிப்படையிலேயே தனது அரசியல் நிலைப்பாட்டை மீளாய்வு செய்ய வேண்டும் என்ற அவசியத்திற்குள் தள்ளப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

இன்றும் மக்கள் தன்னுடன் மிகவும் சுமுகமான அன்பான உறவைக்கொண்டிருக்கிறார்கள். எனவே மக்களின் நலனுக்காக அவர்களது உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டி அவசியம் ஏற்பட்டுள்ளதாக கூறிய சந்திரகுமார்,

எனவேதான் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியிலிருந்து (ஈபிடிபி) விலகி, புதிய செயற்பாட்டைத் தொடர முன்வந்திருப்பதாக குறிப்பிட்டார்.