எழிலன் உள்ளிட்டவர்களின் வழக்கு ஒத்திவைப்பு :சரணடைந்தோர் விபரம் மே 19 இல்
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போன விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட பலர் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த வழக்கு எதிர்வரும் மே மாதம் 19 ஆம் திகதிக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இறுதிக்கட்ட யுத்ததின் போது சரணடைந்தவர்கள் தொடர்பான விபரங்களை இராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவு முகாமில் இருப்பதாகவும் இதனை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் முல்லைத்தீவு நீதிமன்றம் கடந்த விசாரணையின் போது உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.இதனையடுத்து வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இறுதியுத்தம் நிறைவுக்குவந்த எதிர்வரும் மே மாதம் 19ஆம் திகதியன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது யுத்தத்தில் சரணடைந்தவர்களின் விபரங்கள் மன்றில் சமர்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.








