Breaking News

அதிகாரிகள் மீது மைத்திரி பாய்ச்சல்!

வடக்கு- கிழக்கில் பாதுகாப்புத் தரப்பினர் வசம் உள்ள காணிகள் தொடர்பான விபரங்களின தொகுப்பை அதிகாரிகள் நேற்று சமர்ப்பிக்கத் தவறியதால் அவர்கள் மீது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன் காரசாரமாக பேசியுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் 28 ஆம் திகதிக்குள் அத்தனை விபரங்களையும் முழுமைப்படுத்தி அன்றைய தினம் இடம்பெறும் கூட்டத்தில் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது 

வடக்கு-கிழக்கு மாகாணங்களின் பிரதம செயலாளர்கள் மற்றும் 8 மாவட்டங்களினதும் அரச அதிபர்கள் கலந்துகொண்ட கூட்டம் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஒவ்வொரு மாவட்ட அரச அதிபர்களும் தமது மாவட்ட புள்ளிவிபரங்களைச் சமர்ப்பித்தனர்.

பாதுகாப்புத்தரப்பினர் வசம் உள்ள காணிகள் எவ்வளவு அதில் பாதுகாப்புத் தரப்பினர் பாதுகாப்பு தேவைக்கு வைத்திருக்கும் காணி எவ்வளவு? அதன் கரணமாக எவ்வளவு மக்கள் இடம் பெயர்ந்திருக்கின்றனர், நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களின் காணிகள் எந்தெந்த இடங்களில் இருக்கின்றன. உடனடியாக விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்தனர்

இதன்பின்னர் மாகாண ரீதியாக தொகுக்கப்பட்ட விபரங்களை தயாரிக்குமாறு கூறியுள்ளார். இந்த விபரங்கள் தயாராக இருக்கவில்லை. இதனால் ஜனாதிபதி அதிகாரிகளிடத்தில் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். கூட்டத்தின் போது இந்த விபரங்களை தயார்படுத்துமாறு கூறியதை அதிகாரிகள் செயற்படுத்தவில்லை என்று ஜனாதிபதி அதிகாரிகளைத் கடிந்து கொண்டுள்ளார்.

மக்களை 6 மாதகாலத்தினுள் மீளக்குடியமர்த்துவதாக வாக்குறுதி வழங்கி விட்டேன் அதனைச் செயற்படுத்த அதிகாரிகள் அதிக சிரத்தை எடுக்க வேண்டும் காணிகள் தொடர்பிலாக முழு விபரங்களையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். எனவே அதனை பொதுவான ஒழுங்கில் திரட்டுவதற்காக விண்ணப்பப்படிவம் நாளை (இன்று) அனுப்பி வைக்கப்படும் அதனை சகல மாவட்டச் செயலர்களும் பூரணப்படுத்தி உடனடியாக அனுப்ப வேண்டும்.

28 ஆம் திகதி இடம்பெறும் அடுத்த கூட்டத்தில் சகலவிடயங்களும் தயாராக இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த கூட்டங்களின் போது வடக்கு – கிழக்கில் மீள்குடியமர்த்தப்பட வேண்டிய இடங்கள் தொடர்பில் நேரில் சென்று ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரியிருந்தேன். அந்த அறிக்கையும் வழங்கப்படவில்லை என்று ஜனாதிபதி இதன்போது சாடியுள்ளார் அடுத்த கூட்டத்தில் அந்த அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று பணித்துள்ளார்.

இதில் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா, அமைச்சர்கள் ஜனாதிபதியின் செயலாளர் முப்படைத்தளபதிகள் கலந்துகொண்டனர்.