விக்கினேஸ்வரன் தமிழர்களுக்கான தீர்வை குழப்புகிறார் - டிலான்
அனைத்து தரப்பினரும் நம்பிக்கையுடனும் புரிந்துணர்வுடனும் செயற்பட்டால் இவ்வருட இறுதிக்குள் அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனைப்போன்று நாங்களும் நம்புகின்றோம். அதற்கான எப்போதுமில்லாத சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளது.
அதனை தவறவிடக்கூடாது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரெரா தெரிவித்தார்.
ஆனால் புதிய அரசியலமைப்பின் ஊடாக நிரந்தரமான அரசியல் தீர்வைப் பெறும் முயற்சிக்கு வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் முட்டுக்கட்டையாக இருப்பார் என்று தோன்றுகின்றது. சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளின் அடிப்படையில் இரண்டு மாநிலங்கள் உருவாக்கப்படவேண்டும் என்ற வடக்கு முதலமைச்சரின் திட்டவரைபானது தெற்கில் உள்ள இனவாதிகளை போஷிப்பதாக அமைந்துள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் கடந்த காலங்களில்போன்று அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைபபும் அரசியலமைப்பு பேரவைக்கு வெளியில் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவேண்டிய அவசியமில்லை. அரசியலமைப்பு பேரவைக்குள் வேண்டுமானால் பேச்சுக்களை நடத்தலாம் என்றும் அவர் கூறினார்.
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகள் அதில் தேசிய பிரசசினைக்கான தீர்வை உள்ளடக்குதல் தொடர்பாக விபரிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்ட விடயங்களை தெரிவித்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரெரா இந்த விடயம் குறித்து மேலும் விபரிக்கையில்
அனைத்துத் தரபபினரும் நம்பிக்கையுடன் செயற்பட்டால் இவ்வருட இறுதிக்குள் அரசியல் தீர்வைப் பெறலாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்மந்தன் கூறியிருக்கின்றார். அதாவது வரலாற்றில் என்றுமில்லாதவாறு ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ள நிலையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அவரின் நம்பிக்கை நியாயமானதுதான். அதுமட்டுமன்றி அவரைப்போன்ற நம்பிக்கையை நாங்களும் வைத்திருக்கின்றோம். அதாவது புதிய அரசியலமைப்பை உருவாக்கும் வேலைத்திட்டங்களும் இடம்பெற்றுவருகின்றன. எமது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலையீட்டில் அதில் பல திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன.
அந்தவகையில் புதிய அரசியலமைபபில் அல்லது அரசியலமைப்பு திருத்தத்தில் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படவேண்டும் என்ற இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இது எமக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும். அந்தவகையில் அதற்கான முயற்சிகள் இடம்பெற்றுவருகின்றன. அப்படி பார்க்கும்போது எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனின் நம்பிக்கை வெற்றிபெறும் சாத்தியம் உள்ளது.
இது இவ்வாறு இருக்க வடக்கு மாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் ஒரு காலத்தில் பதுளை நீதிமன்றத்தில் பணியாற்றிவர். ஒரு சட்டத்தரணியாக நான் அவரிடம்தான் முதலில் எனது தொழிலை ஆரம்பித்தேன். தனது வாகனத்தை தானே செலுத்திவந்த நீதிபதியாக விக்கினேஸ்வரன் அக்காலத்தில் இருந்தார்.
அவ்வாறான ஒருவர் வடக்கு மாகாண முதலமைச்சராக வந்தமைமையைிட்டு நான் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் தற்போது அவர் மேற்கொண்டுவரும் செயற்பாடுகள் தொடர்பில் நான் கவலையடைகின்றேன்.
வட மாகாண சபையின் இந்த யோசனையானது எமது சவால்களுக்கு மத்தியில் தீர்வைக்காண்பதற்கான எமது முயற்சிக்கு பாரிய தடையாக அமைந்துள்ளது. சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளின் அடிப்படையில் இரண்டு மாநிலங்கள் உருவாக்கப்படவேண்டும் என்ற வடக்கு முதலமைச்சரின் திட்டவரைபானது தற்போதைய நிலைமையில் அவசியமற்றதாக உள்ளது. இந்த வரைபு தெற்கில் உள்ள இனவாதிகளை போஷிப்பதாக அமைந்துள்ளது.
அதாவது நாங்கள் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுக்க முயற்சித்துவருகின்றோம். ஆனால் அந்த முயற்சிகளை சீர்குலைக்கும் நோக்கிலேயே வடக்கு முதல்வரின் திட்டவரைபு அமைந்துள்ளது. இது தொடர்பில் நாங்கள் கவலையடைகின்றோம்.
இந்த அரசியல் தீர்வுத்திட்ட விவகாரமானது மிகவும் உணர்வுபூர்வமானதாகும். எனவே இதில் அவசரப்படக்கூடாது. அவசரப்பட்டு குழப்பிவிட்டால் எதிர்பார்ப்புக்களை கைவிடவேண்டியேற்படும். குறிப்பாக வடக்கு மாகாண சபையின் இந்த செயற்பாடானது தெற்கில் சந்தர்ப்பம் பார்த்து காத்திருக்கும் இனவாதிகளை போஷிப்பதாக காணப்படுகின்றது. தெற்கு இனவாதிகளுக்கு தீனிபோடும் வகையிலேயே வடக்கு முதலமைச்சரின் செயற்பாடுகள் காணப்படுகின்றன.
அது மட்டுமன்றி எமது நேர்மையான அர்ப்பணிப்புமிக்க முயற்சிகளுக்கு தடையேற்படுத்துவதாக இவர்களின் செயற்பாடுகள் உள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் சம்மந்தன் மற்றும் என்னைப்போன்றவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு உலை வைப்பதாகவே வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் உள்ளன.
இது இவ்வாறு இருக்க புதிய அரசியலமைப்புக்குள் தேசிய பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை உள்ளடக்க தீர்மானிக்கபபட்டுள்ள நிலையில் அது தொடர்பான பிரதான குழுவும் உப குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் கடந்த காலங்களைப்போன்று அரசியலமைப்பு பேரவைக்கு வெளியில் அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனித்து இருதரப்பு பேச்சுக்களை நடத்தவேண்டிய அவசியம் இல்லை என்று நான் கருதுகின்றேன்.
அனைத்து பேச்சுவார்த்தைகளையும் அரசியலமைப்பு பேரவைக்குள்ளேயே நடத்த முடியும். அதாவது அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசியலமப்பு பேரவைக்கு உட்பட்டு இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும். ஆனால் பாராளுமன்றத்துக்கு வெளியில் அரசாங்கமும் கூட்டமைப்பும் இருதரப்பு பேச்சுக்களை நடத்தவேண்டியதில்லை என்பதே எனது நிலைப்பாடாகும்.
அரசியலமைபபு பேரவை தொடர்பான பிரதான குழு மற்றும் உப குழுக்களில் அனைத்துக் கட்சிகளினதும் பிரதிநிதித்துவங்கள் உள்ளன. எனவே அனைத்து யோசனைகளும் உள்ளடங்கும் வகையில் பேச்சுக்களை நடத்த முடியும் என்றார்.








