யாழில் மூவாயிரம் வீட்டுத்திட்ட பணிகள் மே மாதம் ஆரம்பம் : யாழ் அரச அதிபர்
யாழ். மாவட்டத்திற்கு 39 ஆயிரம் வீட்டுத் தேவைகள் இருப்பதாகவும், முதற்கட்டமாக 3 ஆயிரம் வீட்டுத்திட்ட பணிகள் மே மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பல் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்
“முன்னுரிமை அடிப்படையில், யாழ்.மாவட்டத்தில் 3 ஆயிரம் வீடுகள் மீள்குடியேற்ற அமைச்சினால் தரப்பட்டுள்ளன. சுமார் 8 லட்சம் பெறுமதியான புதிய கல் வீடுகளை அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பயனாளிகளுக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு, அந்த விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் வழங்கப்படும்.
அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட தெல்லிப்பளை, நாகர்கோவில் மற்றும் மணியம் தோட்டம், அரியாலை பகுதி, மாதகல், பொன்னாலை போன்ற பகுதிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் வழங்கப்படவுள்ளன.
மூவாயிரம் வீட்டுத் திட்டத்திற்கான பயனாளிகள் தெரிவுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. அதேவேளை, பயனாளிகள் தெரிவில் குறைகள் இருப்பின் பிரதேச செயலாளர்கள் ஊடாக விசாரணைகளை மேற்கொள்ளப்டும். எதிர்வரும் மே மாதத்திற்குள் மூவாயிரம் வீடுகள் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு வருட இறுதிக்குள் நிறைவு செய்யப்படும்’ என்றும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.








