நம்பி ஏமாந்து போறோம் காப்பாத்துங்க அம்மா!
ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலைக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளதாவது, ”
இந்தத் தேர்தலில் வாக்களிக்க அறிவு வந்துடுவான்னு நம்பினேன். இப்படி நம்பி நம்பி ஏமாந்து போறதே எனக்கு வழக்கமாப் போச்சு. இப்பவும் முதல்வரைத்தான் நம்பி இருக்கோம்.
இந்தமுறை மத்திய அரசு மறுக்காதுன்னு சொன்னாங்க. தேர்தலை எதிர்கொள்றதுக்கு முன்னால, ‘விடுதலை செய்வார் முதல்வர் அம்மா’ன்னுதான் சொன்னாங்க. அதை நம்பித்தான் இருந்தோம். அவர் பிரசாரத்தைத் தொடங்கினதும் மனசுக்கு கஷ்டமாயிடுச்சு.
வழக்கு நிலுவையில் இருக்குன்னு காரணம் காட்டறாங்க. இந்த வழக்கைப் பொறுத்தவரையிலும், முதல்வர் முன்னாடியே இந்தப் பிரச்சினையை கையில் எடுத்ததால, எப்ப வேணாலும் நடவடிக்கை எடுக்கலாம்னு தேர்தல் ஆணையகம் சொல்லிடுச்சு.
‘தேர்தலுக்கும் விடுதலைக்கும் சம்பந்தமில்லை. புது அறிவிப்பு மட்டும்தான் வெளியிடக் கூடாது’ன்னு லக்கானி விளக்கம் கொடுத்தார்.
முதல்வர் அம்மா தயங்காமல் உடனே நடவடிக்கை எடுக்கணும். நிலுவையில இருக்கற வழக்கை மாநில அரசே கவனிக்கணும். போகப் போக அவனும் நோய்க்காரனா மாறிட்டு இருக்கான். அறிவு அப்பா உடல் நலமில்லாம படுத்துக் கிடக்கார். அவர் நம்பிக்கை இழந்துட்டார்.
ஒவ்வொரு முறையும் ஏமாறும்போது, இப்படியே கடைசி வரையில ஏமாத்திருவாங்களான்னு அழுகிறார். எங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது நடந்துட்ட பிறகு, அறிவை விடுதலை பண்ணி என்னப்பா பிரயோசனம்? நாங்க செத்த பிறகு அவனால, இறுதி வாழ்க்கையை நிம்மதியா வாழ முடியுமா? இதை எப்படி வெளிப்படுத்துறதுன்னு தெரியலைப்பா…” என்றவாறு கதறியழுதார்.








