நிலைப்பாடு ஒன்றானால் வெற்றி எமது பக்கம்! -சுமந்திரன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் அரசியல் நிலைப்பாடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கும் அரசியல் நிலைப்பாடும் ஒன்றாக இருக்குமானால் அது தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தை வெற்றியடையச் செய் யும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நேற்று நடத்திய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர் பான செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற் கண்டவாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் தொடர்ந்துரையாற்றுகையில்
அதிகாரங்கள் அர்த்தமுள்ள விதத்திலே பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும் என்கின்ற அடிப்படை விடயத்தில் நாங்கள் ஒன்றாக நிற்கின்றோம். உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பு சட்டத்தில் கூட நாங்கள் எடுக்கவுள்ள நிலைப்பாடு ஒன்றாகவே இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.
நாங்கள் எடுக்கும் நிலைப்பாடும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கும் நிலைப்பாடும் ஒன்றாக இருந்தால்தான் தமிழ் சமூகமும் வெற்றி கொள்ளும். முஸ்லிம் சமூகமும் வெற்றிகொள்ளும்.இது எவ்வளவு பெரிய சவாலக இருந்தாலும் நாங்கள் சேர்ந்து மேற் கொள்ள வேண்டும். விஷேடமாக 1983 ஆம் ஆண்டு இன வன்முறைக்குப் பின்னர் அரசியலமைப்பு சட்டத்தின் 6 ஆம் திருத்தம் கொண்டுவரப்பட்ட வேளையில் தமிழ் பிரதிநிதிகள் தமது பாராளுமன்ற பிரதிநிதித்துவ ஆசனத்தை இழந்து பாராளுமன்றத்திலிருந்து வெளியேறிபோது பெரியதொரு இடைவெளி ஏற்பபட்டது.
1987 ஆம் ஆண்டு 13ஆம் திருத்தம் கொண்டுவரப்பட்டதன் காரணமாக 1989 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்கு வரக்கூடியதாக இருந்தாலும் 13 ஆம் திருத்ததை முழுமையாக ஏற்றுக் கொள்ளாத காரணத்தினாலும் வேறுபல காரணங்களினாலும் அதற்கு பின்னரும் தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகளுக்கு மாற்று அரசியலில் முழுமையாக பங்கேற்கின்ற சந்தர்ப்பம் இருந்திருக்கவில்லை.
அது இப்போதுதான் மீண்டும் உதயமாகின்றது. இந்த இடைப்பட்ட காலத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆற்றிய பங்களிப்பு மிக முக்கியமான பங்களிப்பு எனக் கூறமுடியும்.
எங்களால் பங்கு பற்ற முடியாமல் இருந்த ஒரு கால கட்டத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியலமைப்பு சம்பந்தமாக மட்டுமல்ல இந்த நாட்டில் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கின்ற மக்களின் நன்மை கருதி தேசிய மட்டத்திலே நிலைப்பாடுகளை எடுத்துக்கொண்டன. அந்த நிலைப்பாடுகள் முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமல்ல விஷேடமாக தமிழ் மக்களுக்கும் முழுக்க முழுக்க பிரயோசனமுள்ளதாகவும் தேவைப்பட்ட ஒன்றாகவும் இருந்திருக்கின்றன.
எங்களுடைய இயலாமையாக இருந்த காலத்திலே எங்களுக்கு அந்த இடைவெளியை கைகொடுத்து நிரப்பிய அரசியல் நண்பராக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசை காண்கின்றோம்.
1988 ஆம் ஆண்டிலிருந்து அனைத்து நிலைப்பாடுகளிலும் ஒரு கொள்கைப்பற்றோடு விட்டுக்கொடுக்காமல் இந்த நாட்டிலுள்ள அனைத்து சிறுபான்மை மக்களுடைய நண்மைக்காக பன்மைத்துவத்தை பேணுவதற்காக அரச அதிகாரங்கள் எந்தளவு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற நிலையான கொள்கையோடு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பயணித்திருக்கின்றது.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 13வது திருத்தத்தில் இருக்கின்ற அதிகாரங்களில் நான்கு அதிகாரங்களை எடுப்பதற்கு அன்றைய அரசாங்கம் முயற்சித்த போது அந்த அரசாங்கத்தின் பங்காளியாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருந்த போதும் அது நடைபெறாமல் தடுத்ததில் காங்கிரஸ் தலைவர் தலையாய கடமையாற்றியிருந்தார் அதையும் நாம் மறக்க முடியாது.
ஆகையினாலே தொடாச்சியாக இந்தக்கட்சி ஆரம்பித்த நாளிலிருந்து இந்த நிமிடம் வரைக்கும் சிறப்பாக சிறுபான்மை சமூகங்களின் அரசியல் நலனுக்காக பணியாற்றியுள்ளது என்றார்.








