Breaking News

சமஷ்டி முறையிலேயே இனப்பிரச்சினைக்கு தீர்வு

இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வே எட்டப்பட வேண்டுமென, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ்.சென்ற சுவீடன் வெளிவிவகார அமைச்சரிடம் இவ்விடயத்தை தெரிவித்ததாக, வடக்கு முதல்வர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

சுவீடன் அமைச்சருடனான சந்திப்பின்போது, வடக்கின் நிலை குறித்து தெளிவாக எடுத்துரைத்ததாக தெரிவித்த விக்னேஸ்வரன், எதிர்காலத்தில், இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வே காணப்பட வேண்டுமென்றும் அதுவும் சமஷ்டி முறையிலேயே அமையவேண்டுமென்றும் எடுத்துரைத்ததாக குறிப்பிட்டார். பல வருட காலமாக முன்வைத்துவரும் சமஷ்டி முறைக்கு வலுசேர்க்கும் வகையில், சுவிட்ஸர்லாந்தின் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவை எடுத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

சமஷ்டியை தென்னிலங்கை அரசியல்வாதிகள் பிரிவினைவாதமாகக் கூறியதனாலேயே, இன்று அதனை பிரிவினைவாதமாக கருதுவதாக தெரிவித்த வடக்கு முதல்வர், தாம் சமஷ்டியை கோருவது நாட்டை ஒற்றுமைப்படுத்தவே அன்றி பிரிப்பதற்காக அல்லவென குறிப்பிட்டார். எனினும் அதனை பிரிவினைவாதமாக பிரசாரம் செய்து வருவதே பிரச்சனைகளுக்கு காரணம் என்றும் குறிப்பிட்டார்.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு, சமஷ்டி முறையில் தீர்வு காணப்பட வேண்டுமென வலியுறுத்தி, வடமாகாணசபை பிரேரணையும் நிறைவேற்றியுள்ள நிலையில், அதனை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளதோடு, குறித்த பிரேரணை வலுவற்றதென கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.