சனல்-4 வெளியிட்ட போர்க்குற்ற புகைப்படத்திலிருக்கும் எனது கணவர் எங்கே?
இலங்கை இராணுவத்தின் போர்க்குற்றம் குறித்து சனல்-4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட புகைப்படத்திலிருக்கும் தனது கணவனை கண்டுபிடித்து தருமாறு முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.
‘முள்ளிவாய்காலில் வைத்து சரணடைந்த எனது கணவரை ஆடைகளைக் களைந்து இராணுவத்தினர் அழைத்துச் செல்கின்ற மற்றும் கிடங்கு ஒன்றின் அருகில் உட்கார வைத்துள்ள புகைப்படங்கள் சனல் – 4 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது’ என இராணுவத்தில் சரணடைந்து காணாமற்போன கண்ணன் என அழைக்கப்படும் ஞானச்செல்வம் உதயராசா (காணாமற்போகும் போது வயது 40) என்பவரின் மனைவி அருந்தவச் செல்வி சாட்சியமளித்தார்.
காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு இரண்டாவது நாளாக நேற்று (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே குறித்த பெண் இவ்வாறு சாட்சியமளித்தார்.
அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில், ‘விடுதலைப் புலிகள் அமைப்பில் இனைந்து மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினராகவிருந்த எனது கணவர் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி இராணுவத்தில் சரணடைந்தார். நானும் எனது இரண்டு பிள்ளைகளும் அதனை நேரில் கண்டோம்.
அதன் பின்னர் கணவர் பற்றிய தகவல் இல்லை. இந்நிலையில் சனல்-4 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட போர்க்குற்ற ஆதார புகைப்படங்கள் எனக்கு கிடைத்தது. அதில் எனது கணவர் ஆடைகள் களையப்பட்ட நிலையில் இராணுவத்தினர் அழைத்து வருவது மற்றும் கிடங்கு ஒன்றின் அருகில் உட்கார வைத்திருப்பது தொடர்பான புகைப்படங்கள் உள்ளது.
இராணுவத்தினர் எனது கணவரைப் பிடித்து வைத்திருந்ததற்கும் சித்திரவதை செய்தமைக்கான ஆதாரங்களாக இந்த புகைப்படங்கள் உள்ளன. இராணுவத்தினரே கணவரை வைத்துள்ளனர். கணவரை மீட்டுத்தாருங்கள்’ என்று கோரிக்கை விடுத்தார். புகைப்படங்களை பார்த்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் எவ்வித பதிலும் கூறாமல் அமைதியாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.










