இனப்படுகொலைக்கு மஹிந்தவும், கருணாநிதியுமே காரணம்!
இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றம் சர்வதேச நீதிமன்ற விசாரணையின் போது மஹிந்த ராஜபக்சவுடன் தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதியும் தண்டிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று கரூரில் அ.தி.மு.க வேட்பாளர் எம்.ஆர். விஜயபாஸ்கரை ஆதரித்து பிரச்சாரம் செய்த நாஞ்சில் சம்பத் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
இலங்கையில் போர் உக்கிரமாக இடம்பெற்ற வேளையில், இலங்கை இராணுவத்திற்கு யுத்த வீரர்களையும், இராணுவத் தளபாடங்களையும் காங்கிரஸ் அள்ளிக் கொடுத்தது.
இதன் போது தமிழகத்தை ஆட்சி செய்த கருணாநிதி போரைத் தடுக்க முயற்சி செய்தாரா? அல்லது தனது எம்.பி.க்களை வாபஸ் பெற்றுக்கொண்டாரா?
இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையில் ராஜபக்ச முதல் குற்றவாளி என்றால், அடுத்த குற்றவாளி கருணாநிதியே.
எனவே, கருணாநிதியையும் சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் நிறுத்த வேண்டும் என நாஞ்சில் சம்பத் மேலும் தெரிவித்துள்ளார்.








