நாட்டைப் பிரிக்க இடமளியேன்! என்கிறார் ஜனாதிபதி
சூழ்ச்சிகள் மூலம் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன். கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட் சிக்கு 106 உறுப்பினர்களையும், சுதந்திரக்கட்சிக்கு 95 உறுப்பினர்களையும் பொது மக்கள் தெரிவுசெய்திருந்தனர்.
இதிலிருந்து தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அரசை கவிழ்க்க முயல்பவர்கள் பாராளுமன்றத்தில் 113 பெரும்பான்மையை காண்பிக்கவேண்டும். அதற்கான சாத்தியங்கள் ஒருபோதும் ஏற்படப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானமானது அவர்களின் நிலைப்பாடாகும். நாட்டின் இறைமை ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு பங்கம் ஏற்படுத்தவோ, அல்லது நாட்டைப் பிரிப்பதற்கோ நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. வடக்கு, தெற்கில் சிலர் தமது அடிப்படைவாத கொள்கைகளை முன்வைக்கின்றனர். ஆனாலும் நாம் நாட்டைப்பிரிக்க இடமளிக்கப்போவதில்லை. தமிழகத்தில் தேர்தலை இலக்காகக் கொண்டு தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில் நாம் கவலைகொள்ளத் தேவையில்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் கைது செய்யப்படுவது தொடர்பில் நான் அறியவில்லை. அப்படி நடந்தால் அதற்கு அனுமதி அளிக்கப்படமாட்டாது. இவ்விடயம் குறித்து உரிய கவனம் செலுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்கள், மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை ஜனாதிபதி மாளிகையில் நேற்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது:-
அண்மையில் பொலிஸ் ஆணைக்குழு மற்றும் அரச சேவை ஆணைக்குழு என்பவற்றின் பிரதிநிதிகளை நேற்று சந்தித்து நான் பேசியிருந்தேன். அவர்களது பிரச்சினைகள் குறித்து நான் கேட்டறிந்துகொண்டேன். ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்பட்டவர்கள் தமது பதவிக்காலத்திற்குள் முக்கிய பிரச்சினைகளை தெரிவு செய்து அவற்றுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவேண்டும். நானும் அப்படித்தான் செய்து வருகின்றேன். எனது பதவிக்காலத்திற்குள் தேசிய ரீதியில் முக்கியமான பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து அவற்கு தீர்வுகாண நடவடிக்கை எடுத்து வருகின்றேன்.
அரசின் மீது குற்றச்சாட்டு
எமது அரசாங்கம் பதவியேற்று 15 மாதங்கள் ஆகின்றன. அரசுக்கு எதிராகவும் எனக்கும் பிரதமருக்கும் எதிராகவும் விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இத்தகைய விமர்சனங்கள் நியாயமானதாகவும், தென்படுகின்றன. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம்திகதி எமது நாட்டு மக்கள் வழங்கிய ஆணை இலகுவானதல்ல.
தேர்தல் ஒன்றை சந்திக்கவுள்ள தலைவர் ஒருவர் முழு ஆயத்தங்களை செய்த பின்னர்தான் தேர்தலில் ஈடுபடுவார். ஆனால் நான் சந்தித்த தேர்தலின் போது நா ன் எவ்வித ஆயத்தங்களுமின்றி அந்த நடவடிக்கையில் இறங்கியிருந்தேன். அரசாங்கத்திலிருந்து வெளியேறிய அன்றுதான் நான் வேட்பாளர் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இந்தத் தேர்தலானது மக்கள் பொறுப்பேடுத்த தேர்தலாகும். 49 கட்சிகள் ஒன்றிணைந்து ஒப்பந்தம் செய்து தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட்டாலும் மக்களே அந்தத் தேர்தலை பொறுப்பெடுத்து மேற்கொண்டனர். 1947 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடைபெற்ற எந்த தேர்தலிலும் இவ்வாறு மக்கள் செயற்பட்டிருக்கவில்லை. இவ்வாறு ஆணைவழங்கிய மக்கள் புதிய அரசாங்கமானது விரைவில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் என எதிர்பார்த்தனர். இவ்வாறான எதிர்பார்ப்பே விமர்சனங்களுகு்கு காரணமாக அமைந்திருக்கின்றது.
சேதமடைந்த வீதியொன்றினை புனரமைக்கவேண்டுமென்றாலும் அதற்கு கார்பட் போடவேண்டுமென்றாலும், அந்தப் பாதையில் சென்றுதான் அதற்கான நடவடிக்கையினை எடுக்கவேண்டும். சேதமடைந்த பாதை வழியாகவே வாகனங்களும் புல்டோசரும் இயந்திரங்களும் எடுத்து செல்லப்படவேண்டும். இவ்வாறு அந்தப் பாதை வழியே சென்று அதனை புனரமைக்கவேண்டும். இவ்வாறு செயற்படும் போது விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் எழுவது என்பது வழமையானதாகும்.
கடந்த பொதுத்தேர்தலின்போது ஐக்கிய தேசியகட்சிக்கு 106 ஆசனங்களையும், சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கு 95 ஆசனங்களையும் மக்கள் வழங்கியிருந்தனர். தனித்து ஆட்சி அதிகாரம் செய்வதற்கு மக்கள் இருபிரதான கட்சிகளுக்கும் ஆணை வழங்கவில்லை. அவ்வாறு ஆணை வழங்கியிருந்தால் பாராளுமன்றத்தில் 113 ஆசனங்கள் ஒரு கட்சிக்கு கிடைத்திருக்கவேண்டும்.
எமது தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் தேசிய அரசாங்கம் அமையுமென்றே கூறியிருந்தோம். தேர்தல் முடிவையடுத்து சகலரும் ஒன்றிணைந்து ஆட்சி செய்யும் தேசிய அரசாங்கத்தை உருவாக்கியிருந்தோம். எமது புதிய அரசாங்கத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை மக்கள் வைத்துள்ளனர். சேதமடைந்த பாதையினை புதுப்பிப்பதற்காக அந்த வழியில் நாம் முன்னேறி செல்கின்றோம்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஏன் தேர்தல்?
எனக்கு முன்பிருந்த ஆட்சியாளர் இரண்டு வருடங்கள் பதவிக்காலம் இக்கும் நிலையில் ஏன் தேர்தலுக்கு சென்றார். என்பது தொடர்பில் நீங்கள் யாரும் கேள்வி எழுப்பியதாக தெரியவில்லை. அதேபோல் அவரும் தனது பதவிக்காலம் நிறைவடைவதற்கு இருவருடங்கள் இருக்கும் நிலையில் தேர்தலுக்கு சென்றார் என்பது குறித்து கூறவில்லை. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நான் எட்டு விடயங்களை குறிப்பிட்டு தேர்தலுக்கு செல்வதாயின் அந்த எட்டுவிடயங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரியிருந்தேன்.
யுத்தமொன்றுக்கு இராணுவம் செல்வதாயின் படை அதிகாரிகள், மற்றும் படைவீரர்கள் மத்தியில் அதற்கான மனநிலையினை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு தேர்தலுக்கு செல்வதற்கு முன்னர் எமது கட்சியினர் மத்தியில் அதற்கான மன நிலையை ஏற்படுத்துமாறு நான் கேட்டிருந்தேன. ஆனால் அவற்றுக்கு செவிசாய்க்கப்படவில்லை.
உண்மையிலேயே இரண்டு விடயங்களுக்காக மட்டுமே தேர்தலை முன்னதாகவே நடத்துவதற்கு முன்னாள் நாட்டின் தலைவர் தீர்மானித்திருந்தார். 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவா தீர்மானத்திற்கு முகம் கொடுக்கவேண்டிய நிலை, பொருளாதார பிரச்சினை ஆகியவையே இந்த இரு காரணங்களாக அமைந்திருந்தன.
அன்று நாட்டுக்குப் பொருத்தமற்ற தீர்மானங்களே எடுக்கப்பட்டன. 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் புதன்கிழமைகளில் தேனீர் விருந்துக்கான சந்தர்ப்பமாகவே அமைச்சரவைக் கூட்டம் அமைந்திருந்தது. அன்று ஆட்சி செய்த குடும்பத்திலுள்ள ஐந்து பேர் மட்டும் அமர்ந்திருந்து முடிவுகளை எடுத்து விட்டு அந்த விடயங்களே அமைச்சரவைக்கு கொண்டுவந்தனர். அதிகாரமற்ற அமைச்சரவையும் அரசாங்கமுமே அன்று காணப்பட்டன.
மாவட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள்
அன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்தவர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டார். கொழும்பிலிருந்து மேடைகள், கட்டவுட்டுகள் மாவட்டம் தோறும் கொண்டுசெல்லப்பட்டன. பஸ்களில் மக்கள் ஏற்றி இறக்கப்பட்டனர். கட்சியின் மாவட்டத் தலைவர்களுக்கோ, அல்லது மாவட்ட அமைச்சர்களுக்கோ இது குறித்து அறிவிக்கப்படுவதில்லை. மாவட்டம் தோறும் குறித்த அமைச்சர் உரையாற்றுவதாகவே நிகழ்வுகள் அமைந்திருந்தன. ஐந்துசதத்திற்குக்கூட மாவட்டத்திலுள்ள அமைச்சர்கள் கணக்கிலெடுக்கப்படவில்லை. அவ்வாறு நிதிஒதுக்கியவர் தற்போது மேதினக் கூட்டத்தினை நடத்துவதற்காக பிரதேசங்கள் தோறும் சென்று போக்குவரத்துக்கும் சாப்பாட்டுக்கும் நிதி பகிர்ந்து வருகின்றார். இந்த நிதி எங்கிருந்து வந்திருக்கின்றது என்ற பிரச்சினையும் எழுந்துள்ளது.
சொகுசு விமானக்கொள்வனவை நிறுத்தினோம்
சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானசேவை நிறுவனம் பெரும் நஷ்டத்தில் இயங்குகின்றது. இந்த நிலையில் கடந்த ஆட்சியாளர்கள் 250 கோடி ரூபா செலவில் அதிசொகுசு விமானமொன்றை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்திருந்தனர். இலங்கை வங்கி மூலம் இதற்கான ஒருதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. நாம் இந்தக் கொள்வனவை இரத்து செய்து அந்தப் பணத்தை விமான சேவை உபகரணங்களை கொள்வனவு செய்யும் வகையில் மாற்றியிருக்கின்றோம்.
கடந்த ஆட்சிக்காலத்தில் நிலவிய ஊழல் மிக்க செயற்பாடுகளை ஒழிப்பதற்காகவும் நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காவுமே நான் அன்று அரசாங்கத்திலிருந்து விலகினேன். 48 வருடங்களாக எதிராக செயற்பட்ட ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து புதிய ஆட்சியை உருவாக்கி ஜனநாயகத்தை உருவாக்கியுள்ளோம்.
சில ஊடக நிறுவனங்கள் செயற்படும் விதத்தைப் பார்த்தால் அவர்கள் இவ்வாறு ஊழல் மோசடிகளை மேற்கொண்ட தலைவர்களுக்கு ஆதரவாக செயற்படுவதாகவே தெரிகின்றது. அன்றைய காலத்தில் ஊடகவியலார்கள் கொல்லப்பட்டனர். ஊடக நிறுவனங்கள் எரிக்கப்பட்டன. ஊடக நிறுவனங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. இவ்வாறு பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள், மற்றும் ஊடக நிறுவனங்கள் தொடர்பில் நான் தற்போது விபரங்களை கோரியிருக்கின்றேன். ஊடகங்கள் ஒருபக்கம் சாராது நடுநிலையாக செயற்படவேண்டும் என்று தயவாக கேட்டுக்கொள்கின்றேன்.
சுதந்திர கட்சிக்குள் உள்முரண்பாடு இல்லை. கட்சியை தோல்வியடையச் செய்ய முயல்பவர்கள் தொடர்பிலேயே முரண்பாடு தொடர்கிறது. அரசாங்கத்தை உடைத்து புதிய ஆட்சியை உருவாக்கும் சூழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன. சூழ்ச்சிகள் மூலம் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு ஒருபோதும் நான் இடமளிக்க மாட்டேன். ஆட்சியை அமைப்பதென்றால் பாராளுமன்றதில் 113 உறுப்பினர்களின் பெரும்பான்மை காண்பிக்கப்படவேண்டும். பிரதமரின் ஒத்துழைப்பின்றி எனது ஆசீர்வாதமின்றி இவ்வாறு பெரும்பான்மையை பெறமுடியாது.
சுதந்திரக்கட்சி கடந்த தேர்தலில் 95 ஆசனங்களைப் பெற்றிருநந்தது. சூழ்ச்சி செய்பவர்கள் இதில் 50 ஆசனங்களைக் கூட பெற்றுவிட முடியாது. சரி 50 உறுப்பினர்களின் ஆதரவை இவர்கள் பெற்றாலும் இன்னமும் 63 உறுப்பினர்கள் பெரும்பான்மையை பெற தேவையாகும். ஐக்கிய தேசியக்கட்சி, ஜே.வி.பி. தமிழ் தேசியக்கூட்டமைப்பு, ஆகியவற்றின் ஆதரவைப் பெற்றால்தான் இந்தப் பெரும்பான்மையினை சூழ்ச்சி செய்வோர் பெறமுடியும். வாழ்க்கையில் ஜே..வி.பி. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஆதரவு இவர்கள் பெற முடியாது.
ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவும் இவர்களுக்கு கிடைக்கப்போவதில்லை. இவ்வாறு சூழ்ச்சியை மேறகொள்பவர்கள் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லையென்றும் அரசாங்கம் தொடர்ந்தும் பயணிக்க முடியாது என்றும் காண்பிக்கவே முயல்கின்றனர்.
ஹைட்பார்க் கூட்டம்
அண்மையில் ஹைட்பார்க்கில் கூட்டமொன்றினை இவர்கள் நடத்தியிருந்தனர். உளவுத்தகவல்களின் படி இந்தக் கூட்டத்திற்கு 11900 பேரே வந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்தக்கூட்டமானது ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தி வரும் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுப்பதற்காகவே நடத்தப்பட்டது. இங்கு உரையாற்றிய முன்னாள் அரச தலைவர் இங்கு கூடியுள்ள மக்களை நீதித்துறையினர் பார்க்கவேண்டும் என்று உரையாற்றியிருந்தார். இந்தக்கூற்றின் மூலம் அவர் நீதித்துறையினருக்கு மற்றும் விசாரணையாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதையே அவதானிக்க முடிந்தது.
உலகிலேயே தோல்வியுற்ற ஒரு தலைவருக்கு விரும்பிய இராணுவ அதிகாரிகளையும், பாதுகாப்பு தரப்பினரையும் அழைத்துக்கொண்டு ஹெலிகொப்டர் மூலம் வீடு திரும்புவதற்கு அனுமதியளித்த ஒரே தலைவராக நானே இருக்கின்றேன்.
கேள்வி:- ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன்பிடி இறக்குமதி தடை நீக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஜி.எஸ்.பி. வரிச்சலுகையும் கிடைக்குமா?
பதில்:- மீன்பிடி இறக்குமதி தடையினை ஐரோப்பிய ஒன்றியம் தளர்த்துவதற்கு நான், பிரதமர் , வெ ளிநாட்டு அமைச்சர் உட்பட அரசாங்கம் எடுத்த நடவடிக்கையே காரணமாகும். தனிப்பட்ட முயற்சியாக இதைக் கொள்ள முடியாது. கொள்கை ரீதியான நடவடிக்கையாகவே இது அமைந்திருந்தது. இதேபோல் வெகுவிரைவில் ஜி.எஸ்.பி. வரிச்சலுகையும் கிடைக்கும்.
கேள்வி:- பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் தகவல்களை கோரியுள்ளீர்கள், இதேபோல் தாக்குதல்களுக்கு உள்ளான ஊடகநிறுவனங்களுக்கு நட்ட ஈடுகள் வழங்கப்படுமா?
பதில்:- ஊடக நிறுவனங்கள் இதற்கான கோரிகைகளை முன்வைத்தால் அரசாங்கம் எவ்ற ரீதியில் இவை குறித்து பரிசீலிக்கப்படும்.
கேள்வி:- சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை தனியார் மயப்படுத்தப் போவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?
பதில்: சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் மிக மோசமான நிலையில் காணப்படுகின்றது. 21 விமானங்கள் இருக்கின்ற நிலையில் ஐயாயிரம் ஊழியர்கள் இதில் பணியாற்றுகின்றனர். நாம் ஆட்சி அமைத்த பின்னர் விமானங்களில் வணிக இருக்கைகளில் இருந்தே நான் பயணம் செய்கின்றேன். இதனால் அரசாங்கம் வேறு அரசாங்கத்துடனோ அல்லது சர்வதே நிறுவனத்துடனோ ஒன்றிணைந்து இந்த சேவையினை முன்னெடுக்கவேண்டியுள்ளது. அவ்வாறு இல்லையானால் மக்களே கடன்சுமையை சுமக்கவேண்டி வரும்.
கேள்வி:சமஷ்டி மூலமான அரசியல்தீர்வு வேண்டுமென்று வடமாகாணசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாட்டு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இலங்கையில் வேறு நாடு உருவாவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்று கூறியிருக்கின்றார். இவ்விடயங்கள் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?
பதில்:- வெளிநாட்டிலிருந்துகொண்டு ஒவ்வொருவரும் கூறும் விடயங்கள் தொடர்பில் கவனத்தில்கொள்ளவேண்டியதில்லை. தமிழகத்தில் தேர்தலை இலக்காகக் கொண்டு கருத்துக்களை கூறுகின்றனர். மத்திய அரசின் தலைவர்களுடன் நாம் இவ்விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம். இதனால் தேர்தலை இலக்காகக் கொண்டு தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில் கவலைகொள்ளத்தேவையில்லை.
அத்துடன் பொதுவாக எடுத்துக்கொண்டால் மாகாண சபைகளில் முன்மொழிவுகள் பிரேரணைகள், நிறைவேற்றப்படுகின்றன. பாராளுமன்றத்தில் 1947 ஆம் ஆண்டு முதல் பல பிரேரணைகள் சட்டமூலங்கள், நிறைவேற்றப்பட்டன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை அப்படியே உள்ளன. வடமாகாணசபையிலும், பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. அது அவர்களது கருத்தாக அமைந்துள்ளது. ஆனால் நாட்டை பிரிப்பதற்கோ , அல்லது நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு பங்கம் ஏற்படுவதற்கோ அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது.
வடக்கு, மற்றும் தெற்கில் அரசியல் இலாபம் பெறுவதற்கு சிலர் முயலுகின்றனர். வடக்கு, தெற்கில் சிலர் தமது அடிப்படைவாதக் கொள்கைகளை முன்வைக்கின்றனர். எது எப்படியிருந்தாலும் நாட்டை துண்டாடுவதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை.
கேள்வி:- 2015 ஆம் ஆண்டு செப்டெம்பரில் ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. போர் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கை எவ்வாறானதாக அமைந்துள்ளது? .
பதில்:- ஐ.நா. ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்த போது மூன்று விடயங்கள் தொடர்பில் எடுத்துக்கூறியிருந்தார். வடக்கு மக்களின் மீள் குடியேற்றம், காணாமல் போனோர் விவகாரம், நீதிமன்றத்தின் சுயாதீனம் ஆகிய மூன்று விடயங்கள் தொடர்பிலேயே சுட்டிக்காட்டியிருந்தார். ஜெனிவா தீர்மானம் தொடர்பில் உருவாக்கப்பட்டுள்ள கட்டமைப்பு தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது.
கேள்வி:- வடக்கில் முன்னாள் விடுதலைப்புலிகள் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் மக்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. இது தொடர்பில் உங்களின் கருத்து என்ன?
பதில்:- இந்தப் பிரச்சினை குறித்து நான் தேடிப்பார்க்கின்றேன். அவ்வாறு நடந்திருந்தால் அதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.