Breaking News

சம்பந்தனை இனவாதிகள் இலக்குவைக்க காரணம் என்ன? விளக்கமளிக்கிறார் விக்ரமபாகு

எதிர்க் கட்சித்தலைவர் சிங்கள இனத்தவராக இருந்திருந்தால் இராணுவ முகாமுக்குள் சென்றமை தொடர்பில் எவரும் வாய் திறந்திருக்க மாட்டார்கள். நாட்டுக்குள் பிரச்சினையை ஏற்படுத்துவதற்கு இனவாதிகளே இதனை பூதாகரமாக்கி வருகின்றனர் என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

சம்பந்தன் இராணுவமுகாமுக்குள் சென்றது தவறாக இருந்தால் அவரை முகாமுக்குள் அனுமதித்த இராணுவத்தினரையே இடை நிறுத்தியிருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

எதிர்க்கட்சி தலைவர் கிளிநொச்சியில் இருக்கும் இராணுவ முகாமுக்கு சென்றதை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் பூதாகரமாக்கி நாட்டுக்குள் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி வருகின்றனர். அத்துடன் அவர் முகாமுக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் பொய்ப்பிரசாரம் செய்து வருகின்றனர்.

எதிர்க்கட்சி தலைவர் ஆர். சம்பந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் என்றவகையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதும் அது தொடர்பில் கேட்டறிவதும் அவரின் கடமை. அதனடிப்படையிலேயே அந்த மக்களின் காணிகளை பார்ப்பதற்காக முகாமுக்கு சென்றுள்ளார்.

இராணுவ முகாமுக்கு நுழையும் போது நுழைவாயிலில் இருந்த இராணுவவீரர்கள் வாயிலை திறந்து அவருக்கு செல்வதற்கு அனுமதித்துள்ளனர். உள்ளே சென்றதன் பின்னர்தான் கொழும்பில் இருக்கும் தலைமை அலுவலகத்தில் அனுமதி இருக்கின்றதா என கேட்டுள்ளனர். அனுமதி இல்லையென்றதும் அவர் அங்கிருந்து திரும்பிவந்துள்ளார்.

ஆனால் இனவாதிகள் இதனை சிங்கள மக்கள் மத்தியில் பூதாகரமாக்கி நாட்டுக்குள் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அத்துடன் சம்பந்தன் இராணுவ முகாமுக்குள் அத்துமீறி நுழையவில்லையென அங்கிருக்கும் கட்டளை தளபதியும் உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன் சம்பந்தன் இராணுவமுகாமுக்குள் சென்றது தவறாக இருந்தால் அவரை முகாமுக்குள் அனுமதித்த இராணுவத்தினரையே ஆரம்பமாக இடை நிறுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை.

இவ்வாறான நிலையிலேயே ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நாட்டில் மீண்டும் இனவாதத்தை பரப்புவதற்காக இந்த விடயத்தை கையிலெடுத்துக்கொண்டுள்ளனர். இனவாதத்தை நாட்டுமக்கள் ஜனவரி 8ஆம் திகதி தோல்வியடையச் செய்தார்கள். அதனை மீண்டும் ஏற்படுத்துவதற்கு இடமளிக்கக் கூடாது.

அத்துடன் எதிர்க்கட்சி தலைவர் சிறுபான்மை இனத்தவர் என்பதால் தான் இந்த விடயத்தை இந்தளவு பெரிது படுத்துகின்றனர். அவர் சிங்களவராக இருந்திருந்தால் இது தொடர்பாக இனவாதிகள் வாய் திறந்திருக்க மாட்டார்கள். எனவே இனவாதத்தை பரப்பி நாட்டுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்கு முயற்சிக்கும் இவர்களுக்கு மக்கள் எதிர்காலத்தில் பதிலளிப்பார்கள் என்றார்.