முன்னறிவிப்பின் பின்னரே முகாமுக்குள் நுழைந்தார் சம்பந்தன் – இராணுவம்
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமுக்குள், முன்னறிவிப்புச் செய்து விட்டே சென்றார் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கொழும்பில் நேற்று ஊடகங்களிடம் தகவல் வெளியிடுகையில்,
”எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் சரியான நெறிமுறைகளுக்கு ஏற்பவே பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமுக்குள் சென்றிருந்தார். அதுபற்றி இராணுவத்தினால் எந்த காவல்நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்படவில்லை.
அவர் தனது பயணத்துக்கு முன்னதாக, யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தார். தமது வருகை தொடர்பாக, யாழ். படைகளின் தளபதிக்கு, தொலைபேசி மூலம் அறிவித்திருந்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் இராணுவ முகாமுக்குள் அத்துமீறி நுழையவில்லை. அதனால் எந்த காவல் நிலையத்திலும், முறைப்பாடு செய்யப்படவில்லை.
முக்கிய பிரமுகர்களின் வருகை தொடர்பாக, முன்கூட்டியே அறிவிப்பது பற்றி, கிளிநொச்சிப் படைகளின் தளபதி, வடக்கு பிரதிக்காவல்துறை மா அதிபருடன் தொலைபேசி மூலம் உரையாடியிருந்தார். அது முறைப்பாடு அல்ல” என்றும் அவர் தெரிவித்தார்.