Breaking News

சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ; கூட்டு எதிர்க்கட்சியினர் நடவடிக்கை

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர கூட்டு எதிர்க்கட்சியினர் தீர்மானித்துள்ளனர்.

நாட்டில் இறையாண்மையையும், தேசிய பாதுகாப்பையும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்விக் குறியாக்குவதாக தெரிவித்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வட மாகாண சபையினால் முன்வைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு இணைந்த சமஸ்டி முறையிலான தீர்வு யோசனைக்கு தென்னிலங்கையில் உள்ள சிங்கள தலைமைகள் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.

அண்மையில் கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்குள் முன் அனுமதி பெறாமல் எதிர்க்கட்சித் தலைவர் சென்றதாக தெரிவித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.


இந்த நிலையில், வட மாகாண சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் தென்னிலங்கை அரசியல்வாதிகள் சிலர் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கைதுசெய்யுமாறும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

அண்மைக்காலமாக தமிழ் இளைஞர்கள், புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைந்துவாழும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டுவரும் நிலையில், தற்போது தமிழ் அரசியல் தலைமைகளையும் சிறைக்குத் தள்ளும் செயற்பாட்டை தென்னிலங்கையைச் சேர்ந்த பலர் மேற்கொண்டு வருவதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் இரா.சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர கூட்டு எதிர்க்கட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.