Breaking News

தமிழர் பகுதியில் உள்ள சிங்களக் குடியேற்றங்களை அகற்றவும் - மக்கள் நலக் கூட்டணி

இலங்கையில் தமிழர் பகுதியில் உள்ள சிங்களக் குடியேற்றங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க மத்திய அரவை வலியுறுத்துவோம் என மக்கள் நலக் கூட்டணி தெரிவித்துள்ளது.


தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் நலக் கூட்டணி இன்று வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழகத்தின் முதலாவது கூட்டணி அரசாங்கத்தை மக்கள் நலக் கூட்டணி, தே.மு.தி.க. மற்றும் த.மா.காங்கிரஸ் ஆகியவை இணைந்து அமைக்கும்.

ஊழலை ஒழிப்பதற்கான லோக் ஆயுக்தா சட்டம், சேவை உரிமைச் சட்டம் மற்றும் முழுமையான மதுவிலக்கு ஆகியவை நடைமுறைப்படுத்தப்படும்.

மேலும், தற்போதைய அ.தி.மு.க அரசாங்கத்தில் உயர்த்தப்பட்ட பால் விலை மற்றும் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும்.

இதேவேளை, தனி ஈழம், கூடங்குளம் அணு உலை விவகாரம் ஆகியவை தொடர்பில் மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

குறித்த விடயங்களில், ம.தி.மு.க மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு இடையில் ஒருமித்த கருத்து காணப்பட்ட போதிலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் இதில் மாறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளன.

இதன் காரணமாக குறித்த விடயங்கள் தொடர்பில் இந்த தேர்தல் அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என வைகோ தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை இணைந்து தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக மக்கள் நலக் கூட்டணியை அமைத்துள்ளன.

இக்கூட்டணியுடன் இணைந்து தே.மு.தி.க. மற்றும், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.