Breaking News

சம்பந்தனின் ‘குத்துக்கரண’ செய்தியால் வேலையிழந்த 3 ஊடகவியலாளர்கள்!

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், கடந்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு
விஜயம் செய்தபோது, இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு, யாழ்.தினக்குரலில் பிரசுரிக்கப்பட்ட செய்தி தவறானது என சுமந்திரன் எம்.பி யினால் கொடுக்கப்பட்ட மறுப்பினை வெளியிட்டமை தொடர்பில், இரா.சம்பந்தன் குறித்த செய்தியை எழுதிய ஊடகவியலாளரும் அவரிற்கு ஆதரவாக இரு ஊடகவியலாளர்களும் தமது பணியினை இராஜினாமாச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனது மறுப்பு செய்தியில், குறித்த ஊடகவியலாளருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வாக்கியங்களும் இடம்பெற்றிருந்தமை மூத்த ஊடகவியலாளர்களால் விமர்சிக்கப்பட்டதோடு, குறித்த மறுப்பில் தினக்குரல் ஊடகம், ஊடகவியலாளரை காட்டிக்கொடுத்துவிட்டது எனவும் விமர்சித்திருந்த நிலையில், குறித்த ஊடகவியலாளரும் அவருடன் பணியாற்றும் ஏனைய இரு ஊடகவியலாளர்களும் தங்களது பணி விலகல் கடிதத்தினைச் சமர்ப்பித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த, கூட்டமைப்பு தலைவர் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில்,  “2016 தீர்வு எனது கணிப்பு மட்டுமே சம்பந்தன் திடீர் குத்துக்கரணம்” என தலைப்பிட்டு கடந்த திங்கட்கிழமை தலைப்பு செய்தியொன்றை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் மறுநாள் செவ்வாய்க்கிழமை,  மறுப்பு செய்தியாக “விசுவாசமாக எல்லோரும் செயற்பட்டால் இந்த வருட இறுதிக்குள் தீர்வு காணப்படும் என்பதே எனது கணிப்பு” என்றே சம்பந்தன் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கொடுத்த மறுப்பினை குறித்த ஊடகம் வெளியிட்டிருந்தது.

அத்துடன் செய்தியில் பிரசுரத்திலே அதை எழுதிய செய்தியாளருடைய எண்ணக்கருத்துக்களுக்கும் விமர்சனங்களுக்கும் கூடுதல் இடமளித்திருப்பதை நாம் காணத்தவறமுடியாமல் உள்ளதென, தனது ஊடகவியலாளர்களையே அது காட்டிக்கொடுத்துமிருந்தது.