Breaking News

வடக்கு முதலமச்சரிடம் பேச்சு மட்டுமே செயலில் எதுவுமில்லை!- சுவாமிநாதன்

வட மாகாண முதலமச்சரிடம் பேச்சு மட்டுமே செயலில் எதுவுமில்லை என இந்து கலாச்சார மற்றும் புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மக்களின் நலன்கள் தொடர்பில் வட மாகாண முதலமச்சரின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண மக்களுக்கு 65000 வீடுகள் அமைக்கும் திட்டத்தினை நிராகரித்து வட மாகாணசபை அனுப்பி வைத்திருந்த கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு இந்த வீடமைப்பு திட்டம் உருவாக்கப்படவில்லை எனவும், ஜெனீவாவை திருப்திபடுத்தும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் விக்னேஸ்வரன் கடிதத்தில் குற்றம் சுமத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யுத்தத்தின் பின்னர் வடக்கு மாகாணம் மக்களின் நலனுக்காக எதனையும் செய்யாது அரசாங்கத்தை விமர்சனம் செய்வதில் காலத்தை செலவிட்டு வருவதாக சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

வடக்கு தமிழ் மக்களின் சமூக, பொருளாதார மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அரசாங்கங்கள் முன்னெடுக்கும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் வட மாகாணசபை நிராகரித்து வருவதாகவும் இது வடக்கு மக்களை பாரதூரமான வகையில் பாதிக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசியல்வாதிகளின் தனிப்பட்ட நோக்கங்கள் மற்றும் அரசியல் நோக்கங்களை மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்