Breaking News

இனி எந்த அரசியல்வாதிக்கும் இராணுவப் பாதுகாப்பு கிடையாது!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அவமானப்படுத்துவதற்காகவோ அல்லது அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதற்காகவோ, அவருக்கான இராணுவப் பாதுகாப்பு விலக்கப்படவில்லை என்று இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

பனாகொடவில் உள்ள  இராணுவத்தின் இலகு காலாட்படைத் தலைமையகத்தில், நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்கு, இராணுவத்தினருக்குப் பதி்லாக நன்கு பயிற்சி பெற்ற காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதிக்கோ, பிரதமருக்கோ, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக இருக்கும் எனக்கோ இராணுவத்தினரின் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. முப்படையினர் முக்கிய பிரமுகர்களைப் பாதுகாக்க வேண்டியதில்லை. அவர்கள் நாட்டைப் பாதுகாக்க வேண்டியவர்கள்.

முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்புப் பணியில் இருந்து இராணுவத்தினரை நீக்குவதற்கு பாதுகாப்புச் சபையில் தான் தீர்மானிக்கப்பட்டது. இனி எந்த அரசியல்வாதிக்கும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்படமாட்டாது.

முன்னைய ஆட்சியாளர்களின் பிள்ளைகள், ஒழுங்கு செய்த முக்கிய பிரமுகர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளுக்காக எமது படையினர் மண்மூடைகளைச் சுமக்க வேண்டியிருந்தது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.