பாகுபாடுகளின்றி நலன் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்: அரசியல் கைதிகள்
தமது குடும்பத்தினர் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்ற நிலையில், வடமாகாண சபை, நலன் திட்டங்களை எவ்வித பாகுபாடுகளும் இன்றி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
புத்தாண்டு தினமான நேற்று (வியாழக்கிழமை) மன்னார் பிரஜைகள் குழுவின் முன்னாள் உப தலைவர் அந்தோனி சகாயம் தலைமையில் விசேட குழுவினர் அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து ஆறுதல் கூறியதோடு அவர்களுக்கு பொருட்களையும் வழங்கி வைத்தனர். குறித்த குழுவினருடன் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போதே அரசியல் கைதிகள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தெரிவித்த அரசியல் கைதிகள், கடந்த 10 வருடங்களுக்கு மேலாக அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளாகிய தமது விடுதலை குறித்து அரசியல்வாதிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக தமது விடுதலை குறித்து தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் இதுவரை வெற்றி பெறாத நிலை காணப்படுகின்றது.
எனவே எதிர்வரும் காலங்களில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை மேற்கொள்வதை விடுத்து எமது விடுதலை குறித்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் முனைப்புக்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் எமது குடும்பங்கள் தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில், எனவே எவ்வித பாடுபாடுகளும் இன்றி அனைவருக்கும் வடமாகாண சபை நலன் திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








