இலங்கை அரசு தமிழருக்கு வழங்கிய புத்தாண்டுப் பரிசு!
நல்லாட்சி என்றும் நல்லிணக்க ஆட்சி என்றும் வாய் கிழியப் பேசி வரும் ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழ் ஈழ மக்களுக்கு நல்ல புத்தாண்டுப் பரிசுகளை அறிவித்திருக்கிறது. வடக்கிற்கு பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருக்கும் நபர்கள் இராணுவத்தின் பாதுகாப்பு அமைச்சில் அனுமதியை பெறவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படாது என்றும் மற்றொரு அறிவித்தலை விடுத்திருக்கிறது.
புத்தாண்டிற்குப் பின்னர் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்மானங்களை அறிவிக்க காத்திருப்பதாக சில நாட்களின் முன்னர் ஸ்ரீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெற்கில் உள்ள விகாரை ஒன்றில் வைத்துக்கூறியிருந்தார். அது அபிவிருத்தி சார்ந்த ஒரு நடவடிக்கை என்றும்கூறியிருந்தார். அந்தத் தீர்மானம் இதுதான் என்று இப்போதே வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அந்த அபிவிருத்தி நடவடிக்கை ஸ்ரீலங்காவின் பேரினவாததத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையாகும்.
வடக்கிற்கு வரும் வெளிநாட்டவர்கள் ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின்அனுமதியை பெறவேண்டும் என்றும் அவர்கள் இராணுவ சோதனைச்சாவடி நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் தமிழ் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து சென்று வெளிநாட்டுக்குடியுரிமையைப் பெற்றவர்களே இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை தாயகத்திற்கு வராமல் செய்வதே இந்த நடவடிக்கை.
அண்மையில் ஸ்ரீலங்கா அரசாங்கம் ஒன்றைக் கூறியிருந்தது. புலம்பெயர்ந்து சென்ற நிலையில் காணி பறிபோனவர்கள் அறிவித்தால் அவர்களின் காணிகளை மீட்டுத் தருவதாகக் கூறியது. இந்த நிலையில் அந்த அறிவிப்பை கொடுத்துவிட்டு அவர்களை வராமல் அச்சுறுத்தும் இந்த நடவடிக்கையையும் அறிவித்துள்ளது. புலம்பெயர்ந்தவர்கள் நாடு திரும்பக்கூடாது என்பதில் ஸ்ரீலங்காவின் புதிய அரசும் மிகவும் உறுதியாக இருக்கிறது என்றே புலப்படுகின்றது.
கடந்த மகிந்த கொடுங்கோல் ஆட்சிக் காலத்தில் வடகிழக்கிற்கு புலம்பெயர்ந்த தமிழ் ஈழ மக்கள் வருவதற்கு இத்தகைய நடைமுறை ஊடாக பெரும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தமிழ் ஈழ மக்களின் நிலையை மூடி மறைக்கவும் அவர்கள் தாயகம் திரும்பாதபடி செய்து அவர்களின் காணிகள், சொத்துக்களை அபகரிக்கவும் இந்த நடவடிக்கையை மகிந்த கொடுங்கோல் அரசு மெற்கொண்டது. அத்துடன் தமிழ் ஈழ மக்களின் நிலையை வெளி உலகத்திற்கு கொண்டுவருவதை தடுப்பதும் இதன் நோக்கமாகும்.
மகிந்தவின் ஆட்சியிலிருந்து ஆட்சி மாற்றம் ஒன்று உருவாகியுள்ளதாகவும் வடகிழக்கில் தமிழ் மக்கள்மீது மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக மறுப்பு, பாதுகாப்பு கெடுபிடிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய ஸ்ரீலங்காவின் புதிய அரசு இந்த அறிவிப்பின் ஊடாக தமிழ் ஈழ மண்ணில் எவ்வகையான ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அதன் உண்மை நிலமை என்ன என்றும் சர்வதேசத்திற்கே எடுத்துரைத்திருக்கிறது என்று கூறலாம்.
இதேவேளை ஸ்ரீலங்காவில் தொடர்ந்தும் பயங்கரவாதத் தடைச் சட்டம் இருக்கும் என்று ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராட்சி தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்காவின் சரித்திரத்தில் தமிழ் ஈழ மக்கள் பயங்கரவாதிகள் என்ற அடையாளத்துடன் அழிக்கப்படுவார்கள் என்பதை அவர் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார். ஸ்ரீலங்காவின் புதிய அரசு தமிழ் ஈழ மக்களுக்கு வழங்கிய அடுத்த புத்தாண்டுப் பரிசு இதுவாகும்.
ஆட்சிக்கு வந்தவுடன் சர்வதேச அரங்கில் நின்று கொண்டு ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இல்லாமல் செய்வது குறித்து வாய் கிழியப் பேசினார். அது கொடிய சட்டம் என்றார். அதனை நீக்க வேண்டும் என்றார். ஆனால் அந்த கொடிய சட்டத்தில் கைது செய்தவர்களை விடுவிக்க மாட்டோம் என்றார்கள். அவர்கள் உண்மையான மனதுடன் பேசவில்லை என்பதை அப்போதே உணர்த்தினார்கள்.
உலகில் எந்தவொரு நாட்டிலும் இல்லாத கொடிய நடைமுறை பயங்கரவாத தடைச்சட்டம். ஒரு தேசத்தின் மக்களை ஒடுக்கும், அழிக்கும், அடக்கும் இந்தச் சட்டம் மனித உரிமை மீறல் சார்ந்தது. மக்களை குரலற்றவர்களாக்குவது. அத்தனை சட்டம் நடைமுறையில் இருக்கும் என்றும் அதற்கு வேறு பெயர் சூட்டுவதாகவும் ஸ்ரீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கூறுகிறார்.
மகிந்த ஆட்சியில் இருந்த எல்லாமும் இப்போது இருக்கிறது என்பதை ஸ்ரீலங்கா அரசு இதைவிட வேறு வித்தில் ஒப்புக்கொள்ள இயலாது. தமிழ் ஈழத்தைப் பொறுத்தவரை ஆட்சிகளின் பெயர்கள் மாறியிருக்கிறதே தவிர, சிங்களப் பேரினவாத்தின் அநீதிகள் மாறவில்லை. ஆக மகிந்த ஆட்சிக்கும் மைத்திரி – ரணில் ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
இருந்தாலும், தமிழ் ஈழ மக்களுக்கு தேனும் பாலும் கொடுக்கப் போகிறோம் என்று சொல்லிவிட்டு தமிழ் புத்தாண்டில் இப்படி அதிரடியான அறிவிப்புக்களை விடுத்திருப்பதன் ஊடாக ராஜபக்சவின் கொங்கோல் ஆட்சியைக்காட்டிலும் மைத்திரி -ரணில் ஆட்சி விஞ்சிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.








