வடக்கு மாகாணசபையைக் கலைக்க வேண்டும் – உதய கம்மன்பில போர்க்கொடி
வடக்கு மாகாணசபையைக் கலைத்து விட்டு, அதன் நிர்வாகத்தைக் கையில் எடுக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கு, கிழக்கை இணைத்து, சமஸ்டி ஆட்சியைக் கோரி தீர்மானத்தை நிறைவேற்றியமைக்காகவே, வடக்கு மாகாணசபையைக் கலைக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
”ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உண்மையிலேயே நாட்டை நேசிப்பவராக இருந்தால், வடக்கு மாகாணசபையைக் கலைத்து, நேரடியாகவே முடிவுகளை எடுக்கும், ஆற்றல் தமக்கு இருப்பதை நிரூபித்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வடக்கு மாகாண முதலமைச்சரை, அழைத்து, தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கக் கூடாதென எச்சரிக்கை விடுக்க வேண்டும்.
மாகாணசபையில் இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்படுவது இதுவே முதல் முறை அல்ல.வட-கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த வரதராஜப்பெருமாள் முன்னர், ஈழப் பிரகடனம் செய்தார். அதனால், அந்த சபையை அதிபர் பிரேமதாச கலைத்து விட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக, ஜனாதிபதியும், பிரதமரும், மௌனமாக இருக்கின்றனர்.
அதிகாரங்களைப் பகிர்வதற்கு சமஸ்டி தான் ஒரே தீர்வு அல்ல. அதனால் பல நாடுகள் தான் உருவாகியிருக்கின்றன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.