Breaking News

கிளிநொச்சி ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்!

கிளிநொச்சி ஊடகவியலாளரது அச்சுறுத்தல் முறைப்பாட்டை, ஏற்காத பொலிஸாரிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு விளக்கம் கோரியுள்ளது.

சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட விடயம் தொடர்பில், செய்தி சேகரிச் சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அத்தோடு, உயிர் அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளரின் முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ளாத கிளிநொச்சி பொலிஸாரிடம் இலங்கை மனித ஆணைக்குழு விளக்கம் கோரியுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகம் 1996 ஆம் ஆண்டு 21 ஆவது இலக்க மனித உரிமைகள் சட்டத்தின் பிரிவு 14 க்கு அமைவாக சொந்த பிரேரணையாக குறித்த சம்பவத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.

இதனடிப்படையில், கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மற்றும் கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சர் ஆகியோரிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளது.

இது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய ஆணையாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தினால் நேற்று முன்தினம் இவ்வாறு பொலிஸாரிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டவர்களால் ஊடகவியலாளருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் பொலிஸார் முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ளாத விடயம் தொடர்பில் தாம் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.