Breaking News

பூநகரியில் ஒருநாள் நிகழ்வுக்காக கோட்டையை உடைத்த இராணுவம்

கிளிநொச்சி – பூநகரியில் தங்களுடைய கலாசார நிகழ்வு ஒன்றுக்காக அங்குள்ள தொன்மைமிக்க கோட்டையின் பகுதிகளை இராணுவத்தினர் உடைத்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை மாலை 5.30 அளவில் கோட்டையின் சில பகுதிகளை உடைத்து தங்களது நிகழ்வு ஏற்பாடு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.நூற்றாண்டு பழமை வாய்ந்த பூநகரி வாடியடிச் சந்திப் பகுதியில் அமைந்துள்ள குறித்த கோட்டையின் சில பகுதிகளே இராணுவத்தினரால் உடைக்கப்பட்டுள்ளது.

பழமைமிக்க செங்கல் சுவர்கள் உடைக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.கிளிநொச்சியில் அமைந்துள்ள மரபுரிமைச் சின்னமாக விளங்கக்கூடிய இந்தக் கோட்டையை பாதுகாக்க வேண்டிய நிலையில் அது இராணுவத்தினரால் தங்களுடைய ஒருநாள் நிகழ்வுக்காக உடைத்து சேதப்படுத்தியமை அதிர்ச்சியளிக்கும் விடயமாகவுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள ஒருநாள் நிகழ்வுக்காக கோட்டையின் மேற்பகுதி செங்கல் சுவர்கள் உடைக்கப்பட்டுள்ளன.இந்தக் கோட்டை ஸ்ரீலங்காவின் தொல்லியல் திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட வேண்டியது என அறிவிக்கப்பட்ட போதும் இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இனிவரும் காலங்களில் கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரியில் அமைந்துள்ள, இந்தக் கோட்டையை பாதுகாக்க முன்வர வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.