வாழ்வாதாரத்தை உயர்த்த புலம்பெயர் உறவுகள் முன்வந்துள்ளனர் – ஐங்கரநேசன்
தாயகமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவற்கான பல்வேறு திட்டங்களில் புலம்பெயர்ந்து வாழும் ஒஸ்ரேலிய தமிழ்மக்கள் முன்வந்துள்ளமை மகிழ்ச்சயளிப்பதாக வடமாகாண விவசாயதுறை அமைச்சர் ஐங்கரநேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அஸ்ரேலியாவுக்கு சென்றிருந்த ஐங்கரநேசன் அவர்கள் அவுஸ்ரேலியாவில் உள்ள தமிழ் இணையத்தளம் ஒன்றுக்கு நேர்காணலை வழங்கியிருந்தார். இந்த நேர்காணலிலேயே மேற்படி கருத்தை பதிவு செய்திருந்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
வடமாகாண சபையின் அதிகாரங்கள் என்பது அதிகாரங்கள் அற்ற கோதாக உள்ளது. இதனாலேயே விடுதலைப்புலிகளும் முன்னர் இத்தகைய அதிகார பரவலாக்க முறையை எதிர்த்திருந்தார்கள்.
ஆனாலும் 2009 இற்குப்பின்னரான காலப்பகுதியில் வடக்கு என்றும் கிழக்கும் என்றும் மாகாணங்கள் பிரிக்கப்பட்டு கிழக்கு மாகாணம் சிங்கள அரசின் நேரடி ஆட்சிமுறையில் வந்தபோதுதான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் தவிர்க்கமுடியாத விதத்தில் வடக்கு மாகாணசபையில் பங்குகொள்ளும் முடிவை எடுத்தது.
பதின்மூன்றாவது திருத்த சட்டம் ஊடாக வழங்கப்பட்ட அதிகாரங்கள் கூட படிப்படியாக பிடுங்கப்படும் நிலை வந்துள்ளது. விவசாயத்துறையை எடுத்துக்கொண்டால் வடக்கு மாகாணத்தில் உள்ள 2000 இற்கும் மேற்பட்ட குளங்களில் 50 வரையான குளங்களே மாகாணசபையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
ஏனையவை கமநல சேவைநிலையங்கள் ஊடாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.
மண்ணகழ்வை தடுக்ககூடிய அதிகாரங்கள் கூட இல்லை. தற்போது முன்வைக்கப்பட்ட உருக்கு வீடுகள் தொடர்பான திட்டத்தை வடக்கு முதல்வர் மீளாய்வு செய்யுமாறு கோரிக்கை விடுத்தபோதும் அதனை அவர்கள் ஏற்றுக்கொள்வதாக சொல்லி ஏமாற்றிவிட்டார்கள்.
எனினும் இருக்கின்ற அதிகாரங்களை வைத்துக்கொண்டு எம்மால் முடிந்த வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.
வடக்கு மாகாணத்தை பொருளாதார ரீதியாக உயர்த்துவதற்கு கூட்டுறவுத்துறையின் ஊடாக எப்படி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது என்பது தொடர்பாக ஒஸ்ரேலியாவில் உள்ள பலருடனும் கலந்துரையாட சந்தர்ப்படம் கிடைத்தது.
சிட்னி பிறிஸ்பன் மெல்பேர்ண் ஆகிய இடங்களில் உள்ளவர்கள் வடக்கு மாகாணத்தில் பால் உற்பத்தி உட்பட பல வேலைத்திட்டங்களில் பங்குகொள்ள முன்வந்திருக்கிறார்கள்.
போரின்போது கட்டமைக்கப்பட்ட அமைப்பு ஒன்றின் ஊடாக தாயகத்தில் பல வேலைத்திட்டங்களை புலம்பெயர்ந்த உறவுகள் செய்துள்ளார்கள். ஆனால் தற்போது அவ்வாறு இல்லை.
எனவே இப்போது வேலைத்திட்டங்களை செய்யும்போது தாயகத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை இனங்கண்டு வழங்கவேண்டும்.
வழங்கப்பட்ட உதவிகள் மக்களுக்கு சென்றடைகின்றதா? அவற்றை சரியான முறையில் பயன்படுத்தி பயன்பெறுகின்றார்களா என்பதை கண்காணிக்கவேண்டும்.
இதனால் அத்தகைய உதவிகளை மாகாண திணைக்களங்களின் அனுசரணையுடன் செய்யுமாறு கோருகின்றேன்.
தற்போதுள்ள சிறிலங்கா அரசில் இடமாற்றங்கள் வந்துள்ளதே தவிர மனமாற்றம் வந்துள்ளதாக சொல்லமுடியாது. எனினும் முதலமைச்சர் நிதியம் ஏற்படுத்துவற்கான தடைகள் விலகும் என நம்புகின்றேன்.
அப்படி நடைபெறும் பட்சத்தில் அனைவரும் அதன் ஊடாக உதவிகளை செய்யலாம்.
எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
முழுமையான நேர்காணல்:
நன்றி -துளியம்








