ரணிலின் வருகைக்காக காத்திருக்கும் சீனா
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சீனப் பயணத்தை, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளவுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
எதிர்வரும், 6ஆம் நாள் தொடக்கம் 9ஆம் திகதி வரை இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சீனாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
சீனப் பிரதமரின் அழைப்பின் பேரில், பீஜிங் செல்லும் அவருடன், சீனத் தலைவர்கள், பேச்சுக்களை நடத்தவுள்ளதாக, சீன வெளிவவிவகார அமைச்சின் பேச்சாளர், ஹொங் லீ தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “சீனாவும் இலங்கைக்கும், பாரம்பரியமான நட்பு நாடுகள். இந்த இருதரப்பு உறவுகள் சமத்துவம், பரஸ்பர மதிப்பு, மற்றும் பரஸ்பரஸ்பர ஒத்துழைப்பு, ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.
சீனா தொடர்பான சாதகமான கொள்கைகளை இலங்கை அரசாங்கம் கொண்டிருப்பதை நாம் மதிக்கிறோம் இலங்கை பிரதமரின் இந்தப் பயணத்தின் போது, பாரம்பரிய நட்புறவுவை வலுப்படுத்தவும், நடைமுறை ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும் வாய்ப்பாக பயன்படுத்த விரும்புகிறோம்.
அத்துடன், சீன இலங்கை மூலோபாய ஒத்துழைப்பு கூட்டின் எதிர்காலம் குறித்து மதிப்பீடு செய்யவும், பரஸ்பர உதவி, நீண்டகால நட்புறவை உச்சத்துக்கு கொண்டு செல்லவும் இந்தப் பயணம் உதவியாக அமையும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.