முன்னாள் புலி உறுப்பினர் எழிலன், கொழும்பு அரசியல் வாதியுடன் தொடர்பு?
தென் பகுதியிலுள்ள பாதாள உலக கோஷ்டியுடன் தொடர்புகளை பேணி பல்வேறு கொலைகளை செய்ததாக கூறப்படும் எழிலன் என்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினருக்கும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் காணப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.
ஸ்டென்லி கெனடி என அழைக்கப்படும் கிறிஷாந்தன், யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்துள்ளதுடன், அவர் அந்த அமைப்பில் எழிலன் என அழைக்கப்பட்டுள்ளார்.
2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இராணுவத்தினரிடம் சரணடைந்த எழிலன், புனர்வாழ்வு பெற்று விடுதலையாகியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து தென் பகுதியிலுள்ள பாதாள உலக கோஷ்டியுடன் எழிலனுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
பலபிட்டிய பகுதியில் வைத்து ரி 56 ரக துப்பாக்கியுடன் சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் எழிலனும் மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த காலப் பகுதியில் தென் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற பிரவேசத்தை பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கடும் அழுத்தங்களுக்கு மத்தியில் அப்போது கைது செய்யப்பட்ட எழிலனும் மற்றைய நபரும் விடுதலை செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கைத்துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் காலி பகுதியில் வைத்து எழிலன் மீண்டுமொரு முறை கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பின்னணியிலேயே தென் பகுதியிலுள்ள பிரபல அரசியல்வாதிக்கும், தென் பகுதியில் இயங்கும் பாதாள உலக கோஷ்டிக்கும் இடையில் தொடர்புள்ளமை குறித்து பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும், குறித்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் தென் பகுதியிலுள்ள பாதாள உலக கோஷ்டியுடன் இணைந்து பல கொலைகளை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதையடுத்தே தென் பகுதி அரசியல்வாதிக்கும் குறித்த சந்தேகநபருக்கும் இடையிலான தொடர்பு குறித்து தற்போது பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.








