Breaking News

கூட்டமைப்பின் மே தின நிகழ்வில் சி.வி. கலந்து கொள்ள மாட்டார்! காரணமும் வெளியானது



வடக்கு, கிழக்கை மையப்படுத்தி கிளிநொச்சியில் இடம்பெறவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கலந்து கொள்ள மாட்டார் என தெரியவந்துள்ளது.

வைத்திய பரிசோதனை மற்றும் வைத்திய ஆலோசனை பெறுதல் ஆகிய தேவைகளின் நிமித்தம் சில தினங்களுக்கு கொழும்பில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதன் காரணத்தினாலேயே அவர் மேற்படி மே தின நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாதிருப்பதாக முதலமைச்சரின் நெருங்கிய தரப்பிலிருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை வடமாகாண சபையினால் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானத்தை ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியதரப்பினருக்கு கையளிக்கும் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் இன்று சனிக்கிழமை எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனிடம் குறித்த தீர்மானத்தை கையளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்து.

எனினும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வைத்திய தேவையின் நிமித்தம் இன்னும் சில தினங்களுக்கு கொழும்பில் தங்கியிருக்க வேண்டி ஏற்பட்டிருப்பதால் இன்றைய நிகழ்வு இடம்பெற மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கிளிநொச்சியில் நடைபெறவுள்ள மே தின நிகழ்விலும் முதலமைச்சரால் கலந்து கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

வடமாகாண சபையின் தீர்மானமானது அடுத்துவரும் சில தினங்களில் எதிர்க்கட்சித் தலைவரிடம் கையளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகின்றது.