Breaking News

பிரபாகரனின் உடல் எரிக்கப்படவில்லை; புதைக்கப்பட்டது – என்கிறார் பொன்சேகா

இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் உடல், எரிக்கப்படவில்லை என்றும், அது புதைக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார் இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.


இலங்கை இராணுவத் தளபதியாக இருந்து ஓய்வுபெற்றவரும், புதிதாக இராஜதந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளவருமான, லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க, அண்மையில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் ஊடகம் ஒன்றுக்கு அளித்திருந்த செவ்வி்யில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் ஆகியோரின் உடல்கள் எரிக்கப்பட்டு, சாம்பல் கடலில் கரைக்கப்பட்டதாக கூறியிருந்தார்.

இதுகுறித்து, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று, போர்க்காலத்தில் இலங்கையின் இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் கேள்வி எழுப்பியிருந்தது.

அதற்குப் பதிலளித்த சரத் பொன்சேகா, இறுதிக்கட்டப் போரின் முடிவில் நந்திக்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரபாகரனின் உடல் எரிக்கப்படவில்லை என்றும், புதைக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

போரின் இறுதிக்கட்டத்தில் தயா ரத்நாயக்க போர் முனையில் இருந்திருக்கவில்லை. அங்கு என்ன நடந்தது என்று அவருக்குத் தெரியாது என்றும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

முன்னதாக, பிரபாகரனின் உடல் எரிக்கப்பட்டு சாம்பல் கடலில் கரைக்கப்பட்டதாகவே சிறிலங்கா இராணுவம் கூறியிருந்தது.

தற்போது தான் முதல் முறையாக, சரத் பொன்சேகா, பிரபாகரனின் உடல் புதைக்கப்பட்டது என்ற தகவலை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.