நாட்டைப் பிளவுபடுத்துமாறு வடக்கு மக்கள் கேட்கவில்லை! -மனோ தெரிவிப்பு
இந்த நாட்டைப் பிளவுபடுத்துமாறு வடக்கிலுள்ள மக்கள் கேட்கவில்லை என்று தெரிவித்த தேசிய கலந்துரையாடல்கள், நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன், தென்னிலங்கையில் ஆயுதங்கள் மீட்கப்படுவதுபோன்று, வடக்கிலும் மீட்கப்பட்டால் இன வெறியர்களைப் போன்று செயற்பட வேண்டாம் என்ற கோரிக்கையையும் விடுத்தார்.
தேசிய கலந்துரையாடல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக மக்களை விழிப்புணர்வூட்டும் முதலாவது அமர்வு கொழும்பில் இன்று சனிக்கிழமை முற்பகல் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இந்த நாட்டை எவராலும் பிளவுபடுத்த முடியாது. இதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. நாட்டை பிரிக்கச் செய்வதற்கு வடக்கு மக்களும் தற்போது விரும்பவில்லை. இந்த நிலைப்பாட்டிலேயே அவர்கள் உள்ளார்கள்.
வடக்கில் இன்று சென்று ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்போம் அல்லது நாட்டைப் பிரிப்போம் என்று எவராவது கூறினால் பொலிஸார் அங்கு சென்று நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் அங்குள்ள மக்கள் அவர்களை அடித்து விரட்டிவிடுவார்கள்.
கிளிநொச்சியில் இன்று சென்று தனிஈழம், ஆயுதப் போராட்டம் பற்றிப் பேசிப்பாருங்கள். அங்குள்ள மக்கள் உங்களை விரட்டியடிப்பார்கள். இதுவே இன்றைய வடக்கின் நிலை. அவ்வளவு தூரத்திற்கு அங்குள்ள மக்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார்கள். யுத்தம் காரணமாக துன்பங்களை அனுபவித்தவர்கள் அவர்களே.
எனவே வடமாகாண மக்கள் நாட்டைப் பிளவுபடுத்த முனைகிறார்கள், மீண்டும் ஆயுதம் ஏந்தி போராட உள்ளனர் என்ற பீதியைக் கிளப்ப வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.
இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் இன்றும் மீட்கப்படுகின்றன. தென்னிலங்கையிலும் ஆயுதங்கள் மீட்கப்படுகின்றன. அண்மையில்கூட லக்கல பொலிஸ் நிலையத்தில் ஆயுதங்கள் கொள்ளையிடப்பட்டதோடு மஹியங்கனைப் பகுதியில் துப்பாக்கித் தொழிற்சாலை ஒன்றும் முற்றுகையிடப்பட்டது.
கடந்த காலங்களில் 1971ஆம் மற்றும் 89ஆம் ஆண்டுகளில் தென்னிலங்கையிலும் கலவரங்கள் இடம்பெற்றிருந்தன. அங்கு ஆயுதங்கள் தற்போது மீட்கப்பட்டிருக்கும் நிலையில் மீண்டும் கலவரங்கள் இடம்பெறும் என்று கூற முடியும் அல்லவா. ஆனால் அவ்வாறு மக்கள் கூறுவதில்லை. ஆனால் வடக்கில் பழைய தற்கொலை அங்கிகள் மீட்கப்பட்டால் தென்னிலங்கையில் பீதியை ஏற்படுத்தி இனவாதத்தை தூண்டுகிறார்கள்.
எனவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோரிடம் இனவாதம், மதவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதம் என்பவற்றை உருவாக்குவதற்கு முயற்சிக்க வேண்டாம் என்ற கோரிக்கையை விடுக்கின்றேன் – என்றார்.








