மைத்திரியின் இலண்டன் வருகைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று பிரித்தானியாவிற்கு பயணம் செய்வதை எதிர்த்து பிரித்தானியத் தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தி வருகின்றது.
லண்டனில் அமைந்துள்ள பொதுநலவாய அலுவலகத்திற்கு முன்பாக இன்று முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகியுள்ள இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இறுதிக்கட்டப் போரின்போது இறுதி 5 மாதங்களுக்குள் சுமார் 70,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 70,000 மக்கள் கொல்லப்பட்டமைக்கு மகிந்த ராஜபக்ஷ மட்டும் காரணமல்ல எனவும் அந்த நேரம் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேனவுமே காரணம் எனவும் பிரித்தானியத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
அதேவேளை யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் கடந்துள்ள போதிலும் தற்போதைய அரசாங்கமும், தமிழர்களுக்கான உரிய தீர்வுத் திட்டங்களையோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதியையோ வழங்க மறுத்துவருவதாகவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
புதிய அரசாங்கமும் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றது. இதன்காரணமாகவே இந்த அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றும் நாளையும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பிரித்தானிய தமிழர் பேரவை அறிவித்துள்ளது.













