Breaking News

40 வருடங்களின் பின்: இனப்படுகொலையாளி தூக்கிலிடப்பட்டார்(காணொளி)

பாகிஸ்தானிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கான 1971 ஆம்
ஆண்டு யுத்தத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயற்பட்டு இனப்படுகொலை மற்றும் குற்றங்களில் ஈடுபட்டார் என்ற குற்றம் சுமத்தப்பட்டிருந்த பங்களாதேஷின் மிகப்பெரிய இஸ்லாமிய கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவர் நிஜாமி நேற்று நள்ளிரவுக்கு சற்றுப் பின்னர் தூக்கிலிடப்பட்டார்.

இந்த நிகழ்வு அவரது ஆதரவாளர்களிடையே கடும் கொதிப்பை ஏற்படுத்தி இருக்கின்ற அதேவேளை அவர் தூக்கில் இடப்பட்ட செய்தி கேட்ட நூற்றுக்கணக்கான மக்கள் தலைநகர் டாக்கா வீதிகளில் மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.

ஆயிரக்கணக்கான பாலியல் வல்லுறவுகள், புத்திஜீவிகள் படுகொலை உட்பட பல மிக மோசமான போர்க்குற்றங்களுக்கு நிஜாமி காரணமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. பாகிஸ்தானில் இருந்தான பங்களாதேஷின் சுதந்திர போரை நிஜாமி எதிர்த்து வந்தார். இந்த யுத்தத்தில் சுமார் 30 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டனர்.






நிஜாமியின் மேல் முறையீட்டு மனு மற்றும் சீராய்பு மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து, அதிபரிடம் கருணை மனு அளித்து நிவாரணம் பெறுவதற்கான வாய்ப்பு மட்டுமே இருந்தது. அதேசமயம், அவரை தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்துவந்தனர். எனவே, அவர் எந்நேரமும் தூக்கிலிடப்படலாம் என தகவல் வெளியானது.

இதற்கிடையே ஜனாதிபதியிடம் கருணை கோர விரும்பாததால் நிஜாமி தூக்கிலிடப்பட்டார்.

இதுகுறித்து உள்துறை மந்திரி அசாதுஜமான் நேற்று கூறுகையில், “நிஜாமி தனக்கான கடைசி வாய்ப்பாக ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பும்படி கேட்கப்பட்டது. அவர் கருணை கோரவில்லை. எனவே, மரண தண்டனையை நிறைவேற்றும் உத்தரவு சிறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது என்றார்.