Breaking News

இந்திய கூலிப்படை மூலம் எம்மை கொலை செய்ய மஹிந்த திட்டமிட்டிருந்தார்; ராஜித

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சென்னையிலுள்ள கூலிப்படையிரை வைத்து தம்மை கொலை செய்வதற்கான சூழ்ச்சிகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட குழுவினர் வகுத்திருந்த தகவல்களை அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன நேற்று புதன்கிழமை வெளியிட்டார்.


அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தான் கைச்சாத்திட்ட காசோலைகள் நான்கினைக் கொண்டே அந்தச் சாரதி வங்கியிலிருந்து பணத்தை மீளப்பெற்றுள்ளார். அவர் பணத்தை எங்குவைத்து ஏற்றினார், பணத்தைக் கொண்டுவந்த வாகனத்தின் இலக்கம், பணம் இறக்கப்பட்ட இடம், யாரிடம் அந்தப் பண மூட்டை கையளிக்கப்பட்டது என அனைத்துத் தகவல்களும் தற்போது தெரியவந்துள்ளன.

சாதாரணமாக ஒரு வங்கியிடமிருந்து இவ்வளவு பெரிய தொகையை உடனடியாக மீளப்பெற முடியாது. எனினும், முன்னாள் நிதியமைச்சரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடாக விடுக்கப்பட்ட உத்தரவுக்கமையவே இச்செயற்பாடு இடம்பெற்றுள்ளது என்றும் அறியக்கிடைத்துள்ளது.

அத்தோடு, இதுதொடர்பான சர்சைகளை விசாரணையின்போது மூடிமறைப்பதற்காக சில உயரதிகாரிகளுக்கு இலஞ்சமும் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தின்போது சென்னையைச் சேர்ந்த கூலிப்படை மூலமாக எம்மை கொலை செய்யவும் மஹிந்த ராஜபக்ச குழுவினர் திட்டமிட்டுள்ளமை அந்தச் சாரதி ஊடாகவே தற்போது தெரியவந்துள்ளது.

அதாவது, கடல் மார்க்கமாக படகில் அந்தக் கூலிப்படையை வரவழைத்து எம்மைக் கொலை செய்வதே அவர்களின் திட்டமாக இருந்துள்ளது. இவ்வாறு சூட்சமமான முறையில் தாக்குதல் நடத்தினால் மட்டுமே எந்த சாட்சிகளும் இன்றி தப்பித்துக்கொள்ளலாம். இதற்காகவே சென்னைக் கூலிப்படையை அவர்கள் தெரிவு செய்துள்ளார். .

ஆனால், நாம் அப்போதே அனைத்துக்கும் தயாராகவே இருந்தோம். நாம் கடந்த அரசிலிருந்து வெளியேறும்போதே, எம்மைச் சூழவுள்ள உயிராபத்துக்கள், பிரச்சினைகள் குறித்து எமது குடும்பத்துக்கு கூறிவிட்டோம்.

ராஜபக்ஷக்களுடன் எமக்கு இன்று நேற்றல்ல, சுமார் 42 வருட கால பழக்கம் உள்ளது. அவர்கள் எப்படியானவர்கள், எவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

கடந்த ஆட்சிக் காலத்தில் பத்திரிகையில் ஆசிரியர்களை அலரிமாளிகைக்கு வரவழைத்து இந்தச் செய்தியைப் பிரசுரியுங்கள், இதனைப் பிரசுரிக்க வேண்டாம் என்றுக் கூட மஹிந்த பணித்துள்ளார்.

எனவே, இந்த விவகாரத்தை நாம் எளிதில் விடப்போவதில்லை. பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவும் நிதிக்குற்றப்பிரிவைப் பலப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கிறார். ஆகவே, இந்தப் பண விவகாரம் தொடர்பில் இன்றிலிருந்தே விசாரணைகள் ஆரம்பமாகும் – என்றார்.