Breaking News

பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு அமெரிக்காவிடம் கையளிப்பு



தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு இன்று புதன்கிழமை அமெரிக்க அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்தியா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே, கனடா, பிரான்ஸ் மற்றும் ஐ.நா. என்பவற்றிற்கு கையளிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றயை தினம் அமெரிக்காவிடமும் கையளிக்கப்பட்டது.

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவராலய அரசியல் விவகாரங்களுக்கான பொறுப்பாளர் கெலி பிலிங்ஸ்சிலியிடம் (Kelly Billingsley) தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள் நேரடியாகக் கையளித்தனர்.

இதனைத்தொடர்ந்து அமெரிக்கக் குழுவினருக்கும், தமிழ் மக்கள் பேரவை குழுவினருக்குமான சந்திப்பு நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது பேரவையினர், தமிழ் மக்களிற்கான கொளரவமான நிரந்தரத்தீர்வின் அவசியத்தையும், பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச விசாரணையின் அவசியத் தேவையையும் வலியுறுத்தினர்.

மேலும், இனங்களுக்கிடையிலான ஒரு நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சியில் பொறுப்புக்கூறல் எவ்வளவு முக்கியத்துவமானது என்பது பேரவையின் குழுவினரால் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது மட்டுமன்றி இதற்கு ஒரு சர்வதேச விசாரணையின் அவசியமும் தெளிவான காரணங்களுடன் கூறப்பட்டு, பேரவையின் இது சம்மந்தமான வருங்கால நடவடிக்கைகள் எடுத்துக்கூறப்பட்டன.

இதேவேளை, ஸ்ரீலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவராலய துணைத்தூதுவர் தலமையிலான குழுவினருக்கும், தமிழ் மக்கள் பேரவையினரின் இணைத் தலைவர்களில் ஒருவரான வைத்திய நிபுணர் லக்ஸ்மன் தலமையிலான பேரவையின் குழுவினருக்குமான ஒரு பிரத்தியேக சந்திப்பு யாழ். நகரில் அண்மையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.