Breaking News

அனைத்தின மக்களிடையே சமாதானம் மலர வேண்டும்; எதிர்க்கட்சித் தலைவர்

அனைத்தின மக்களிடையே சமத்துவம், சகவாழ்வு உருவாகி உலக சமாதானம் மலர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

புனித வெசாக் போயா தினத்தையொட்டி விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

புத்தர் பெருமானின் பிறப்பு, ஞானம் பெறுதல் மற்றும் இறப்பு உள்ளிட்ட முப்பெரும் நிகழ்வுகளை நினைவுகூறும் முகமாக உலக வாழ் பௌத்த மக்களால் புனித வெசாக் போயா தினம் கொண்டாடப்படுகின்றது.இலங்கையர்களான எம் அனைவருக்கும் மிகவும் முக்கிய சமய தினமொன்றாக வெசாக் போயா தினம் விளங்குகின்றது.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில், இலங்கை மக்களுக்கு இப்புனித போயா தினத்தில் வாழ்த்துவதற்கு வாழ்ப்புக் கிட்டியமையானது எமக்குக் கிடைத்த பாக்கியமாகக் கருதுகிறேன்.

புத்தர் பெருமானின் வழிகாட்டலின் பிரகாரம் உலக வாழ் அனைத்து மக்களிடமும் பொறாமை, குரோத எண்ணங்கள் என்பன அகன்று, மன அழுக்கற்ற நற்கரும சிந்தனைகள் அவர்களது உள்ளங்களில் பிறக்க வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.

பஞ்சசீலங்களைக் கடைப்பிடிக்கின்ற சமூகமொன்று தோற்றம் பெற்று அனைத்தின மக்களிடையே சமாதானம் மலர வேண்டுமென இப்புனித வெசாக் போயா தினத்திலே தான் பிரார்த்திப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.